பக்கம் எண் :

26விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

     ஆங்கிலேயர்களால் "சிப்பாய்ப் புரட்சி" என்று அழைக்கப்பெற்ற இந்திய
சுதந்திரப்புரட்சி,  விந்திய மலைக்கு வடக்கேயுள்ள  நிலப்பரப்பு  முழுவதிலும்
நடைபெற்றதெனலாம். அதிலே, இந்துக்களும் இஸ்லாமியர்களுமான மாமன்னர்
கள், சிற்றரசர்கள்,  போர்  வீரர்கள்,  புரோகிதர்கள்,  மௌல்விகள்  பிரதேச
மொழிப்  பண்டிதர்கள்,  பொதுமக்கள் ஆகிய பல தரப்பினரும்  நேரடியாகப்
பங்கு கொண்டனர். இந்தப் புரட்சியில் தளபதிகளாக விளங்கி உயிர்த் தியாகம்
புரிந்தவர்களிலே கான்சாகிப், தாந்தியா தோபே, இலட்சுமிபாய் ஆகிய மூவரும்
பாரதம் முழுவதிலும் அறிமுகமாயினர்.

     இம்மூவர்  பற்றியும், இவர்கள்  கலந்துகொண்ட பெரும் புரட்சி பற்றியும்
வட   இந்தியாவில்   பிரதேச   மொழிகளிலே   எண்ணற்ற  இலக்கியங்கள்
தோன்றியுள்ளன. ஆனால், தமிழகத்திலே  நடைபெற்ற  பாளையக்காரர் போர்
பற்றி வடபுலத்து மொழிகளில் கவிதை இலக்கியம் எதுவும் தோன்றாதது போல,
வடக்கே  பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்  அடித்தளமே ஆட்டம் காணும் வகையில்
நடைபெற்ற   சிப்பாய்ப்புரட்சி   பற்றித்   தமிழ்மொழியில்  கவிதையாகவோ,
நாடகமாகவோ இலக்கியம் எதுவும் தோன்றவில்லை.

கலாச்சார எழுச்சி

     1806ல்  வேலூர்  சிப்பாய்ப் புரட்சி முடிந்து 1906ல் தூத்துக்குடி சுதேசிக்
கிளர்ச்சி தோன்றுவதற்கு இடையில் உள்ள ஒரு நூற்றாண்டு காலத்தை இந்திய
தேசிய ஒருமைப்பாடு மலர்ந்த காலம் எனலாம். அந்தக் காலத்தில் தமிழ்மொழி
உள்ளிட்ட பிரதேச மொழி  ஒவ்வொன்றும் மறுமலர்ச்சி அடைந்தன. இதற்குக்
காரணம்,   பாரததேசம்   முழுவதிலும்  ஏக காலத்தில   உருவான கலாச்சார
எழுச்சியே எனலாம். இதனை, சற்று விரிவாக ஆராய்வோம்.

      தமிழகத்திலே,  தமிழ் மூவேந்தர்  அரசுகள் மறைந்த பின்னர், குறுநில
மன்னர்களின்  சிற்றரசுகளே  சிதறிக்கிடந்தன. அந்தச்  சிற்றரசுகளும் பாண்டி
மண்டிலத்தில் தான் பெருகியிருந்தன.

    1801ல் பாளையக்காரர் போர் தோல்வியுற்றதோடு, அந்தச் சிற்றரசுகளிலும்
பல மறைந்தொழிந்தன. எஞ்சிய சிற்றரசுகள் ஜமீன்களாக - ஆங்கில அரசுக்கு
மக்களிடமிருந்து  வரி வசூலித்துக்  கொடுக்கும் ஏஜண்டுகளாக - மாற்றப்பட்டு
விட்டன. இதனால், தமிழக  மக்கள் தங்களுக்கு வழிகாட்டி  நடத்திச் செல்லும்
தலைமையற்றிருந்தனர்.