பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 27

     மதம் வேறு;  அரசியல்  வேறு என்ற  நிலை  அன்று  இருக்கவில்லை.
இரண்டும்   பின்னிப்  பிணைந்திருந்தன. அரசும்   அரசரும்,   மதத்தையும்
மதவாதிகளையும் வளர்த்தனர். அதுபோல, மதமும் மதவாதிகளும்  அரசையும்
அரசர்களையும்   காத்து   நின்றனர்.  ஆனால்,  பிரிட்டிஷாரின்  ஆதிக்கம்
வலுத்ததால்,  அரசர்கள்  ஆதிக்கமிழந்தனர். மதவாதிகளும்  போஷிப்பாரற்று
விட்டனர். மக்கள்  மீது  ஆதிக்கம்  பெற்ற  ஆங்கிலேயர்கள்   மதத்தாலும்
அன்னியர்களாக இருந்ததும் இதற்கொரு காரணமாகும்.

      குமரி  முதல் இமயம் வரை பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம்  அமைதியான
சூழ்நிலையில்  ஒழுங்காக  இயங்கி  வந்தது .  நாடு  முழுவதிலும்  இயங்கிய
அரசையும் கிறித்துவமிஷனரிகளையும் பெற்றிருந்த காரணத்தால் ஏகாதிபத்திய
வாதிகளின்  சிந்தனையும்  செயல் முறையும்  ஒரே சீராக இருந்தன. ஆனால்,
அவர்களுக்கு  அடிமைப்பட்டிருந்த  மக்கள்  நிலைமை   அப்படி   இல்லை.
அவர்கள் மிகவும் பரிதாப நிலையில் இருந்தனர். அவர்களை நடத்திச் செல்ல
தேசம்  முழுவதற்கும்  பொதுவான  ஒரு அமைப்போ, தலைமையோ இருக்க
வில்லை.  தேசம் முழுவதற்குமென்ன,  பிரதேச  ரீதியில்கூட  இல்லை. இந்த
நிலையில்  கூட, சாதி-குலம்-ஆசாரம் ஆகிய  வேற்றுமைகளற்ற இஸ்லாமியர்
களும்  சீக்கியர்களும்  ஒரே  சீரான   சிந்தனையையும்  செயல்முறையையும்
பெற்றிருந்தனர்  எனலாம்.  சாதி -  சமயம் -  குலம் -  ஆசாரம்   ஆகிய
வேற்றுமைகளால்   பிளவுபட்டு,   சாதிக்குச்   சாதி,   குலத்திற்குக்   குலம்,
ஆசாரத்திற்கு   ஆசாரம்   பகையும்   பூசலும்   கொண்டிருந்த  இந்துக்கள்
நிலைதான்  மிகவும்  மோசமாக  இருந்தது.  பாரதத்தின் மக்கள் தொகையில்
இந்துக்களே பெரும்பான்மையினராதலால், இவர்களது  அவலம்  இந்தியாவின்
அவலமாக  இருந்தது.   இந்த   அவலநிலை    நீடிக்குமானால்,   அரசியல்
சுதந்திரத்தை   இழந்த  இந்துக்கள், ஆன்மீகக்  கலாச்சார  சுதந்திரத்தையும்
மிகவும் அமைதியான முறையில்  இழந்துவிடக்  கூடிய அபாயமிருந்து வந்தது.

     இந்த நிலையில், இந்துக்களுக்கு அவசரமாகத் தேவைப்பட்டது அரசியல்
ஒருமைப்பாடன்று;  சமூக வழிப்பட்ட  கலாச்சார ஒருமைப்பாடேயாகும். இந்த
ஒருமைப்பாடு  தோன்றினாலன்றி,  இழந்துவிட்ட அரசியல்  உரிமையைக் கூட
திரும்பவும்  என்றென்றைக்கும்  பெற  முடியாதென்றே உண்மை வெள்ளிடை
மலையெனத் தெரிந்தது.