பக்கம் எண் :

28விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

பொற்காலம்!

     19 ஆம்   நூற்றாண்டானது   பாரதப்பெருநாட்டின்  வரலாற்றிலே ஒரு
பொற்காலம்   என்று   கூறலாம். பாரத  சமுதாயத்தை - அரசியல் துறையில்
மட்டுமல்லாமல்  -  ஆன்மிகத்துறையிலும் அடிமைப்படுத்தி  ஆளமுயன்றனர்,
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார,தம்மவர்களான கிறித்துவ மிஷனரிகளைக்
கொண்டு  பாரதத்தின்  மிகப்பழமையான  கலாச்சாரத்தின்  மீது திட்டமிட்டுத்
தாக்குதல் நடத்தினர்.  "மூட நம்பிக்கைகள்" எனப்  பெயரிட்டு பாரதீயர்களின்
மிகவும்  பழமையான  நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்துத் தவிடு பொடியாக்க
முயன்றனர்.   அந்த   முயற்சியிலே   அவர்கள்   அன்று   முழு   வெற்றி
கண்டிருந்தால்,   பாரதத்தின்  பழம்பெரும்   கலாச்சாரக்    கருவூலங்களாக
விளங்கிவரும்  இதிகாச,  புராண,  சாத்திர, தோத்திர  இலக்கியங்களெல்லாம்
செல்வாக்கற்றுப்   போயிருக்கும்.   அதிர்ஷ்டவசமாக,    ஆன்மிக   ரீதியில்
இந்து  சமுதாயத்தினரை   அடிமைப்படுத்த எடுத்துக்கொண்ட  முயற்சிகளிலே
பிரிட்டிஷார்   முழுஅளவில்   வெற்றி   பெற  முடியவில்லை.   வெற்றிபெற
முடியாதபடி,  மகத்தானதொரு   ஆன்மிக  எழுச்சி 19 ஆம்   நூற்றாண்டிலே
பாரதத்தில்   ஏற்பட்டது.  அந்த   எழுச்சி   ஏற்பட்டில்லையேல்,    20ஆம்
நூற்றாண்டின்   முற்பாதியில் நாடு முழுவதிலும் நடந்த   விடுதலைப்புரட்சியும்
இல்லையென்றே  சொல்லிவிடலாம்.  இந்த  ஆன்மிக  எழுச்சியாலும்   தமிழ்
உள்பட பிரதேச  மொழிகளிலே புரட்சிகரமான எண்ணங்களைப்  போதிக்கும்
இலக்கியங்கள் தோன்றின.

நால்வர்

     ஆன்மிக ரீதியில் இந்து சமுதாயத்தினரை ஒன்றுபடுத்தவும், அவர்களுக்
குள்ளே  நீண்ட  நெடுங்காலமாக   நிலைத்திருத்த  சாதி -  குல -  ஆசார
வேறுபாடுகளை    அகற்றவும் ,  புரோகித    மதம்   கற்பித்த    குருட்டு
நம்பிக்கைகளிலிருந்து   அவர்களை   விடுவிக்கவும்   நான்கு  பெரியார்கள்
தோன்றினர்.  அவர்கள்,  இராசாராம்  மோகன்ராய்,  இராமலிங்க சுவாமிகள்,
தயானந்த சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோராவர்.

      இந்நால்வரும்   சற்று    முன்பின்னாகத்  தோன்றியும்    மறைந்தும்
இருப்பினும், அவர்கள் ஏககாலத்தில் வாழ்ந்திருந்தனர்.மூன்று விஷயங்களிலே
இந்த நான்கு ஞானியர்களும் கருத்தொற்றுமை கொண்டவர்களாக இருந்தனர்.