1. "ஆன்மிக ரீதியில் இந்து மக்களை எல்லாம் ஒன்றுபடுத்துவது; 2. "சாதி, குலம், ஆசாரம் ஆகிய வேறுபாடுகளிலிருந்து இந்து மக்களை மீட்டு,அவர்களிடையே ஒருமைப்பாடு காண்பது; 3. "பௌராணிக-புரோகித பாணியிலான மூட நம்பிக்கைகளை ஒழிப்பது." இராம் மோகன்ராய், வங்காளி - சம்ஸ்கிருதம் - பாரசீகம்-அரபு-பாலி- ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே ஆழ்ந்த புலமை பெற்றவராக விளங்கினார். வங்க மொழியிலே சிறந்த இலக்கியங்களைப் படைத்தார். ஆங்கில மொழியின் ஆதிக்கத்திற்கு ஆசி கூறினார் என்றாலும், தம் தாய் மொழியான வங்காளியிடத்து எல்லையற்ற பற்றுக் கொண்டிருந்தார். அம்மொழியிலே பல கவிதைகளும் புனைந்தார். வங்க மொழியின் மறுமலர்ச்சிக்கு அரும்பணி ஆற்றியுள்ளார் ராம் மோகனர். திரு. சுகுமார் சென் என்பவர், தாம் இயற்றியுள்ள "வங்க இலக்கிய வரலாறு" என்ற நூலிலே, இராம் மோகனரின் இலக்கியப் பணிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள பகுதி வருமாறு: "இந்தியாவிலே உதயமாகிக் கொண்டிருந்த புதுயுகத்தின் முன்னோடிகளில் ஒருவராகப் பலவகையிலும் விளங்கியவர் ராம்மோகன ராய். "பாட நூல்களல்லாத உரைநடை நூற்களை முதல் முதலில் வங்காளி மொழியில் எழுதியவர் அவர்தான். அவர் அவ்வாறு வெளியிட்டவை இரண்டு வகையானவை. அவை வேதாந்த நூற்களின் மொழி பெயர்ப்புக்களும் உபநிஷத்துக்களின் மொழி பெயர்ப்புக்களும். சமூக சீர்திருத்தம், சமயச் சீர்திருத்தம் என்னும் துறைகளில் அவர் கொண்டிருந்த கருத்துக்களை வற்புறுத்தி வழக்காடும் நூற்கள் சிலவும் அவரால் உரைநடையில் எழுதப்பட்டன. "கிறித்துவப் பாதிரிமார்கள் செய்து வந்த செயல்களை எல்லாம் எதிர்த்துப் போராடும் பொருட்டு, அவர் வங்காளி, ஆங்கிலம், பாரசீகம், ஆகிய மொழிகளில் பத்திரிகைகள், பிரசுரங்கள் வெளியிட்டார். "கவிதை என்பதும் அவர் பேனா அறியாத துறை அன்று. பகவத் கீதையை அவர் வங்காளியில் செய்யுள் வடிவமாக |