1921ல் 'தேசபக்த’னில் எழுதப்பட்ட ஒரு தலையங்கத்திற்காக, அப்போது
அதன் ஆசிரியராக இருந்த வ.வே.சு.ஐயர் மீது வழக்குத் தொடரப்பெற்றது.
பிரஸ்தாபத் தலையங்கம் தம்மால் எழுதப்பட்டதல்ல வென்றும், தாம் தமது
சொந்த ஊர் சென்றிருந்த காலை வேறொருவரால் எழுதப்பட்டதென்றும்
ஐயர் நீதிமன்றத்தில் கூறியும் பயனில்லை. அவர் 9 மாதச் சிறைத்தண்டனை
பெற்றார்.
1908ல் சுப்பிரமணிய பாரதியாரின் 'இந்தியா' என்ற வாரப் பத்திரிகை
பிரிட்டிஷ் தமிழிகத்திலிருந்து இரவோடு இரவாக வெளியேறி, பிரெஞ்சுத்
தமிழகமான புதுவையில் குடிபுகுந்தது. அவரது 'விஜயா' என்ற நாளிதழும்
சென்னையிலிருந்து புதுவைக்கு மாற்றப்பட்டது.
அந்நாளில், விளம்பரமான தேசபக்தருக்கு பத்திரிகை நடத்த அனுமதி
கிடைப்பது அரிது. அதனால், விளம்பரமாகாத ஒருவர் பெயரில் அனுமதி
பெறுவது வழக்கம், 1913ல் 'ஞானபாநு' பத்திரிகையைத் தொடங்கிய சிவா,
தமது பெயருக்கு அனுமதி கிடைப்பது அரிதெனக்கருதி தம்முடைய
மனைவியார் மீனாட்சி அம்மையார் பெயரில் அனுமதி பெற்றார்.
"இந்தியா” வாரப் பத்திரிகைக்கு பாரதியார்தான் உண்மையான
ஆசிரியர். ஆனால் அவர் பெயரில் அனுமதி பெறாமல், முரப்பாக்கம்
சீனிவாசன் என்பவர் பெயரில் அனுமதி பெற்று நடத்தப்பெற்றது. இதனால்,
பாரதியார் எழுதிய ஆட்சேபகரமான தலையங்கமொன்றிற்காக, பெயரளவில்
ஆசிரியராக இருந்த திரு.சீனிவாசன் ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை
பெற்றார்.
அச்சகத்தாரின் அச்சம்!
விடுதலைப் போர் உச்ச கட்டத்திற்குச்சென்ற ஒவ்வொரு நேரத்திலும்
இந்திய மொழிப் பத்திரிகைகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் அதிகரித்தன.
1930ல் காந்தியடிகள் தொடங்கிய உப்பு சத்தியாக்கிரகம் 1931ல் சட்ட
மறுப்பாக மாறிய போது, "இந்திய மொழிப் பத்திரிகைச் சட்டம்"மிகவும்
கடுமையாக அமுல் நடத்தப்பட்டது. 1931 ஜுலையில் பாரதம் முழுவதிலும்
131 நாளிதழ்கள் ஜாமீன் தொகை கட்டவேண்டி ஏற்பட்டன. அப்படிக்
கட்டிய தொகை ரூ 2,50,000 ஆகும்.