"புஸ்தகம் ஒன்றுக்கு அரை ரூபாய் வீதம் மொத்தப் புஸ்தகத்துக்கு வரவு
ரூபாய் 2 லக்ஷம். ஆகவே, மிச்சம் ரூபாய் 1,56,000. ஒன்றரைலக்ஷத்தம்
பத்தாறாயிர ரூபாய் ஸித்தமாகக் கிடைக்கிறது. இத்தனை நல்ல லாபம்
கிடைப்பதை உத்தேசித்தே ஸ்ரீமான் பாரதியார் 1க்கு ரூபாய் 2-வீதம் வட்டி
கொடுக்கத்துணிந்தார்.
இதற்குத் தாங்களும் தங்கள் நண்பர்களும் தலைக்கு குறைந்த பக்ஷம்
ரூ.100 வீதம் இயன்ற தொகை கடனாகவேனும் இனாமாகவேனும்
கொடுத்துதவும்படி பிரார்த்திக்கிறேன்.1
பாரதியாரும் தம் கையெழுத்திட்டுத் தனியாக ஒரு சுற்றறிக்கையைத்
தமக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பி, அவர்களுடைய பணவுதவியைக்
கோரியிருந்தார். ஆனால், இந்த முயற்சியின் முடிவு தெரிவதற்கு முன்பே
அவரது மண்ணுலக வாழ்வு முடிந்துவிட்டது.
பாரதியார் அரும்பாடுபட்டுத் தம் கவிதை நூல்களை வெளியிட்டு
வந்தாரென்றாலும், படித்த தமிழர்கள் அவற்றை வாங்கி, அவரை ஊக்குவிக்க
வில்லை. ஆனால், " The Fox with the Golden Tail ( பொன் வால் நரி) "
என்று ஆங்கிலத்தில் அவர் வெளியிட்ட நகைச் சுவைமிக்க கற்பனைக்
கதைகளுக்கு மிகுந்த கிராக்கியிருந்தது. அறிஞர் பலர் பாராட்டுக் கடிதங்கள்
எழுதியிருந்தனர். பிரபல டாக்டர் ஒருவர் 500 புத்தகங்களை வி.பி.யில்
அனுப்புமாறு பாரதியாருக்கு எழுதியிருந்தார். அதனைப் படித்து, தம்
அருகிலிருந்த குவளைக் கண்ணன் என்ற நண்பரிடம் கீழ்வருமாறு கூறினார்.
"போகச் சொல்லு, விதைவைப் பசங்களை! நான் என்னுடைய சொந்த
பாஷையில் என் முழு மூளையையும் கசக்கிப் பிழிந்து ' பாஞ்சாலி சபதம் '
எழுதியிருக்கிறேன். அது நன்றாக இருக்கிறதென்று ஒருவனும் ஒரு கடிதமும்
எழுதவில்லை. அந்தப் புஸ்தகத்தை நீ ஒருவன்தான் வாசிக்கிறாய்.
ஆங்கிலத்தில் எழுதின இந்தப் 'பொன்வால் நரிக்கு 500 பிரதி உடனே
வேண்டுமாம்!"
பாரதியார் காலத்தில் தமிழ் நூல்களை வெளியிடுவதற்குப் போதிய
மூலதனத்துடனும் தொழில் திறனோடும் கூடிய பதிப்பகம் இல்லாததால், தமிழ்
எழுத்தாளர்பட்ட அல்லல்கள் பல. அவற்றை பாரதியாரே வருணிக்கக்
கேட்போம்.
_
1. 'சித்திரபாரதி' பக்.117-18.