அந்நாளில் விடுதலைக் கிளர்ச்சி பற்றிய நூல்களை வெளியிடுவதற்கு
அதிகப்படியான துணிவு தேவைப்பட்டது. சிறை செல்லவும் கைப்பொருளை
இழக்கவும் துணிவு பெற்றவர்களே, தேசிய எழுச்சியை
எதிரொலிக்கின்ற - தேசியவாதிகளால் எழுதப்படுகின்ற நூல்களை வெளியிட
முன்வந்தனர். ஏதேனுமொரு நூலை சட்ட விரோதமானதென்று அரசு
கருதிவிட்டால், அதனை எழுதிய ஆசிரியர், வெளியிட்ட பதிப்பகத்தார்,
அச்சடித்துக் கொடுத்த அச்சகத்தார் ஆகிய அத்தனை பேர்மீதும் வழக்குத்
தொடுத்து, அவர்களைத் தொல்லைப்படுத்துவது வழக்கமாக இருந்தது.2
'பூட்டை உடையுங்கள்' என்ற பெயரில் 'தமிழ்ப் பண்ணை'
வெளியிட்டிருந்த ஒரு நூலை ஆட்சேபகரமானதென்று அறிவித்து, ஆசிரியர்
திரு . இராமரத்தினம் அவர்களையும், வெளியிட்டவரான,
திரு . சின்ன அண்ணாமலையையும் அரசு சிறையில் தள்ளியது. இப்படி,
இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகள்! இத்தனைக்
கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு தான் விடுதலைப்போர்க்களத்திலே
தமிழ்மொழிக்கு வாழ்வு தேடினர், தேசிய வாதிகள்.
இப்படி, மொழித்துறையில் தேசியவாதிகள் நிகழ்த்திய பெரும்
புரட்சியை-ஆங்கில ஆதிக்கத்தை அழித்தொழிக்க நடத்திய அறிவுப்
போராட்டத்தை ஒரு மாகாப்பியமாகவே எழுதலாம். ஆனால், அதற்கு
மகாகவி கம்பர்தான் மீண்டும் வரவேண்டும்.
1. இந்நூலாசிரியரால் இயற்றப்பெற்ற ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற நூல்
அச்சடிக்கப்பட்டு முடிந்திருந்த நேரத்தில், அதனைப் பறிமுதல் செய்தனர்,
சென்னைப் போலீசார். ஆசிரியர், ‘ஆகஸ்டுக் கிளர்ச்சி’ காரணமாக,
பாதுகாப்புக்கைதியாக மராத்தி மாநிலச் சிறையில் அடைபட்டிருந்ததால்,
அவர்மீது வழக்குத் தொடரவில்லை.