பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 281

                          நூலகங்கள்

     மொழி   வளர்ச்சிக்கு   நூலகங்கள்   இன்றியமையாது  தேவைப்படும்
சாதனங்களாகும்.   இத்துறையில்   விடுதலை   வீரர்களான   தேசியவாதிகள்
முன்னோடிகளாக இருந்து பணிபுரிந்துள்ளனர்.

      1927   ஆம்  ஆண்டில்  சென்னை   மாநகரில் நடைபெற்ற  தேசிய
காங்கிரஸ்   மகாசபைப்   பந்தலிலே   கூடிய  ஒரு  கூட்டத்தில்  'சென்னை
புத்தகாலய சங்கம்' தோற்றுவிக்கப்பெற்றது.

     கோபாலகிருஷ்ண கோகலே அவர்களால் தொடங்கப் பெற்று மகாகனம்
வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரால்  வளர்க்கப்பெற்ற  'இந்திய  ஊழியர் சங்கம்'
(Servants of India society)  தனது  சென்னைக்  கிளை   அலுவலகத்தில்
மிகப் பெரியதொரு நூலகத்தை நிறுவியுள்ளது.

      32ஆவது  காங்கிரஸ்  மகாசபைத்  தலைவர் டாக்டர் அன்னிபெசன்ட்
அம்மையாரால்   நிர்வகிக்கப்பெற்ற   சென்னை   அடையாறு   தியாஸபிகல்
சங்கத்தில் முதல்தரமான நூல் நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

     தேசப்  பெருந்தலைவர்களில்  ஒருவரான  மகாதேவ கோவிந்த ரானடே
பெயரால்   மயிலை   லஸ்   சர்ச்   சாலையில்  'ரானடே  நூல்  நிலையம்'
ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேசியத் தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண
கோகலே     பெயரால்     சென்னை    அரண்மனைக்காரன்    தெருவில்
அமைக்கப்பெற்றுள்ள    கோகலே   மண்டபத்தைத்  தன்னகத்தே  கொண்ட
இந்திய இளைஞர் சங்கத்தின் (ஒய்.எம்.ஐ.ஏ) கட்டடத்தில் மிகப்பெரிய நூலகம்
ஒன்று உள்ளது. 

     இதுகாறும்  கூறிய  நூலகங்களிலே  பெரும்பாலும்  ஆங்கில நூல்களே
இடம்  பெற்றுள்ளன. தமிழ் நூல்களை மிகுதியாகக் கொண்ட நூலகங்களையும்
தோற்றுவித்தனர் தேசியவாதிகள்.

     திரு.   வி.   க,  டாக்டர்  தெ.  பொ.   மீனாட்சிசுந்தரனார்   ஆகிய
தேசியவாதிகளால்  தொடங்கப்பெற்ற  சென்னைத்  தமிழ்ச் சங்கம்,சிந்தாதிரிப்
பேட்டை  உயர்நிலைப்  பள்ளியில்  தமிழ்  நூல்களை  மிகுதியாகக் கொண்ட
நூலகமொன்றைத் தோற்றுவித்தது.