மகாஜன சபை
சென்னை மகாஜன சபை மிகவும் பழமையான தேசிய அமைப்பாகும்.
அதன் சார்பில் தமிழ்- ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் ஏராளமான
நூற்களைத் தன்னகத்தே கொண்ட மிகப் பெரிய நூல் நிலையம் ஒன்று
நெடுங்காலத்துக்கு முன்பே நிறுவப் பெற்று, இன்றளவும் பொது மக்களுக்கு
நன்கு பயன்பட்டுவருகின்றது.
வெளி மாவட்டங்களிலுள்ள நகரங்கள் பலவற்றிலும் நூலகங்கள்
தேசியவாதிகளால் நிறுவப்பெற்றன. அவற்றுள், காரைக்குடி தேசபக்தர்களால்
நிறுவப்பெற்ற இந்துமதாபிமான சங்க நூல்நிலையம் குறிப்பிடத்தக்கதாகும்.
மகாகவி பாரதியார் இந்த சங்கத்தை வாழ்த்திப் பாடியுள்ளார்.
தலைசிறந்த தேசிய வாதியான பாண்டித்துரைத் தேவரின் முயற்சியால்
அமைக்கப்பெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் நூல்களையே மிகுதியாகக்
கொண்ட நூலகம் ஒன்று உள்ளது.
இன்னும், தேசிய இயக்கத்திற்குப் புறம்பாக தேசியவாதிகளல்லாத
கல்விமான்களால் தோற்றுவிக்கப்பட்ட நூலகங்கள் பலவாகும். அவைகூட,
நாட்டில் தோன்றி வளர்ந்த தேசிய எழுச்சியின் மறைமுகத்தூண்டுதலால்
பிறந்தவை என்று சொல்லலாம். அவற்றில் சென்னை பவானந்தர் நூல்
நிலையம், இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்தஜன சபை நூலகம்
ஆகியவை முக்கியமானவையாகும்.
விடுதலைப்போர் பொதுஜன எழுச்சியாக மலர்ந்த காந்தி சகாப்தத்திலே,
தமிழில் நூல்கள் பெருகி, தமிழ் மட்டுமே அறிந்த மக்களிடையே நூல்
படிக்கும் ஆர்வமும் தோன்றியதால், கிராமங்களிலும் நகரங்களிலும்
தேசபக்தர்களின் ஞாபகார்த்தமான தமிழ் நூல்கள் மட்டுமே கொண்ட சிறு சிறு
நூலகங்கள் தோன்றின. விடுதலைப் போர் சாத்வீக நெறியில் - சமாதான
முறையில் நடைபெற்றதால், மக்களுடைய அறிவு வளர்ச்சிக்குத் தேவைப்படும்
வாசக சாலைகளையும் நூலகங்களையும் பெருக்கும் பணியில் ஈடுபடத் தேசிய
தொண்டர்களுக்குப் போதிய அவகாசமிருந்தது.