தாகூர், பண்டித மதன் மோகன் மாளவியா, திரு.வி.கலியாணசுந்தரனார், அரவிந்த கோஷ், அன்னிபெசன்ட், சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகியோர் ஆன்மிக உணர்வும் கலந்த அரசியல் எழுச்சியை உருவாக்க முயன்றனர். சுப்பிரமணிய சிவா, திருநெல்வேலி செஷன்ஸ் நீதிமன்றத்திலே தம்மீது நடைபெற்ற அரசநிந்தனை வழக்கில் கொடுத்த வாக்கு மூலத்தில் கீழ் வருமாறு கூறியுள்ளார்: "நான் சன்னியாசி, முக்தியின் விதிகளைப் பற்றியும், அதை அடைவதற்குரிய வழிகள் பற்றியும் பிரச்சாரம் செய்வதே என் பணியாகும். ஆன்மாவுக்கு 'முக்தி' என்பது அதற்கு அன்னியமான சகல கட்டுக்களிலிருந்தும் விடுபடுவது ஆகும். ஒரு தேசத்திற்கு முக்தி என்றால், சகலவிதமான அன்னிய அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவது- அதாவது, பரிபூரண சுயராஜ்யம் என்றே பொருள்." சுப்பிரமணிய சிவா, இந்திய சமுதாயத்தின் ஆன்மிக சுதந்திரத்தைப் பறிக்கத்தக்க மெக்காலே கல்வித்திட்டத்தை அன்னிய அரசின் அடக்குமுறைக் கொடுமைகளில் ஒன்றாகவே கருதினார். அதனால், இந்திய சமுதாயத்தின் ஆன்மாவே அடிமைப்பட்டுவிடக்கூடும் என்றும் அவர் அஞ்சினார். 'மகரிஷி' எனப் போற்றப் பெற்ற வ.வே.சு.ஐயர், காந்தியடிகள் தாயரித்தளித்த தேசியக் கல்வித்திட்டத்தை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். அவரது கருத்து வருமாறு: "கல்வியானது சுய பாஷையைத்தான் மிக அதிகமாகக் கவனித்ததாய் இருக்கவேண்டும் என்று சொல்வோம். நமது தமிழ்நாட்டு அறிஞர்களுக்குத் தமிழில் இரண்டு எழுத்துச் சேர்த்துத் தவறின்றி எழுதத் தெரியாதபடி செய்துவிட்டிருக்கிற தற்போதைய கல்வி முறையை நாம் மிகவும் வெறுக்கிறோம். மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைப் படித்துப் பொருள் எளிதில் உணரவும், தமிழில் தெளிவுற எழுதவும் பேசவும் பயிலுவிப்பதே நமது முறையாகும். தமிழ்ப் பாஷையின் போக்குகளை அறிந்து கொள்வதோடு, கணக்கு, தேச சரித்திரங்கள், பூகோள வர்ணனை, சாமான்ய பௌதிக சாஸ்திரம் முதலியவற்றைத் தமிழ் மூலமா கவே ஒரு மட்டுக்குப் படித்தபிறகேதான் மாணவர் ஆங்கில |