பக்கம் எண் :

298விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

முன்  வரவில்லை.  ஆயினும்,  அன்று  விடுதலைப்  போரின்  முன்னணித்
தளபதிகளில்  ஒருவராக  விளங்கிய  ராஜாஜி  அவர்கள்  தேசியக்  கல்வித்
திட்டத்தை  மனநிறைவுடன்  ஆதரித்தார்.  அத்திட்டம்  செயல்படுத்தப்பட்ட
வித்யா பீடங்களின் வெற்றிக்கும் உதவிபுரிந்தார்.

     பீகார் வித்தியாபீடப் பட்டமளிப்பு விழாவில் ராஜாஜி கலந்து கொண்டது
பற்றி டாக்டர் இராஜேந்திர பிரசாத் தரும் தகவல் வருமாறு:

     "1926 மார்ச்சில்,  பீகார்  வித்தியா  பீடப் பட்டமளிப்பு விழாவின்போது
வாழ்த்துரை  கூறுவதற்காக  திரு.இராசகோபாலாச்சாரியார் அழைக்கப்பட்டார்.
அவ்வுரையில்,  அவர்  "இம்மாணவர்கள் நம் ஆர்வத்தின் நந்தா விளக்குகள்"
என்று  கூறிப்  புகழ்ந்தார்.  இது முற்றிலும்  உண்மையே. பட்டமளிப்பு விழா
மிகவும்     அழகாகவும்    சிறப்பாகவும்     அமைந்தது.   அவ்விழாவுக்கு
வந்திருந்தவர்கள்    எல்லோரும்    அதைக்    கேட்டுப்    பெருமகிழ்ச்சி
அடைந்தார்கள்."1

     தேசியவாதிகள் அவ்வளவு பேருமே அந்நாளில் காங்கிரஸ் மகாசபையும்
காந்தியடிகளும்  வகுத்த  தேசியக் கல்வித் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்
என்று   சொல்வதற்கில்லை.   இந்த   உண்மையை   காந்தியடிகளே  தமது
எழுத்துக்களில்  வெளிப்படையாகக் கூறியுள்ளார். தேசியக் கல்வித் திட்டத்தை
ஏற்றுச்   செயல்படாத  தேசியவாதிகள்  தமிழ்நாட்டில் தான் அதிக அளவில்
இருந்தனர் - இங்குதானே  இருக்க  முடியும்! இங்கு ஆங்கில ஆதிக்கத்துக்கு
எதிராக   தமிழ்    வித்தியாபீடம்   தோன்றவில்லை.    என்றாலும்,  இந்தி
வித்தியாபீடம்  தோற்றுவிக்கப்  பெற்றது.  தேசியக் கல்வித்திட்டத்திலே இந்தி
போதனையும்  -  குறிப்பாக,   இந்தி   மொழி   வழங்காத   மாநிலங்களில்
அம்மொழியைப்  பரப்புவதும் அடங்கியிருந்ததால்,  தென்னிந்தியாவில்-அதன்
தலையிடமாக  விளங்கிய சென்னை நகரில் - தட்சிண பாரத இந்திப் பிரச்சார
சபை அமைக்கப் பெற்றது.

     குஜராத்தில்   தேசியவாதிகளின்  செல்வாக்கிலிருந்த  நகரமன்றங்களும்
தேசியக்  கல்வித்திட்டத்தைப் பரப்புவதில் ஆர்வங்காட்டின. அரசாங்கத்திற்கு
எதிராக - போட்டி  அரசாங்கமாக  விளங்கிய - காங்கிரஸ்  மகாசபையுடனும்
ஒத்துழைத்தன.


1. இராஜேந்திர பிரசாதரின் ‘என் வரலாறு’; பக்.438