தேசியக் கல்வித் திட்டத்திற்குத் தேவைப்படும் பாட நூல்களை
எழுதுவதிலேயும், வெளியிடுவதிலேயும் கூட அந்நாளைய தேசியவாதிகள்
ஆர்வங்காட்டினர். கல்வி பயில்வோரின் தொகை மிகுதியாக இராத
அந்நாளிலே பாட நூல்களை எழுதுவதும் வெளியிடுவதும் வருவாய் தரும்
தொழிலாக இருக்கவில்லை. அந்த நிலையிலும், தியாக உணர்வோடு இந்தத்
தொண்டில் ஈடுபட்டனர். தேசியவாதிகளிலே பெருந்தலைவர்கள் கூட பாட
நூல்கள் எழுதலாயினர். தலைவர் ராஜாஜி அவர்கள், 'தம்பி வா',
'இதையும் படி' என்னும் தலைப்புகளிலே ஆரம்பப் பள்ளிகளுக்கான பாட
நூல்களை எழுதி வெளியிட்டார். டாக்டர் ஜாகிர் உசேன் அவர்களும் பாட
நூல்களை ஏராளமாக எழுதினார்.
'தமிழில் முடியுமா?'
தேசியக் கல்வித்திட்டத்திற்கு ஆங்கில மோகம் பிடித்த
தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்ப்பை
முறியடிக்கும் பொருட்டு, தாய்மொழிக்கு முதலிடம் தரும் புதிய கல்வி
முறையை ஆதரித்தும், அரசாங்கக் கல்வி முறையின் கேடுகளை விளக்கியும்
பிரச்சார நூல்கள் வெளியிடுவதிலேயும் தேசியவாதிகள் அக்கரை காட்டினர்.
விஞ்ஞானப் பாடங்களுக்குத் தமிழைப் போதனாமொழி ஆக்குவது
சாத்தியமில்லை என்று கல்வி நிபுணர்கள் கருதினர். தாய்மொழிப்
பற்றுடையோரிலும் ஒரு சாரார் அத்தகைய கருத்தைக் கொண்டவராக
இருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் முறையில் 'தமிழில் முடியுமா?'
என்னும் பெயரில்-'முடியும்' என்று விடையளிக்கும் வகையில் ராஜாஜி ஒரு
நூல் எழுதினார்.
தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியார் தேசியக் கல்விக்கு ஆதரவாகவும்
பிரிட்டிஷ் கல்விமுறைக்கு எதிராகவும் வெளியிட்ட கருத்துக்களை ஏற்கனவே
அறிந்து வைத்திருக்கிறோம். திரு.வி.கலியாணசுந்தரனார், சுப்பிரமணிய சிவா
போன்ற பெருந்தலைவர்களும் தேசியக் கல்வித்திட்டத்திற்கு ஆதரவாக
எழுதியும் பேசியும் பிரச்சாரம் செய்தனர். நாடு விடுதலை பெற்ற பின்னர்
அமையும் சுதந்திர அரசாங்கம் தேசியக் கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக்
கொண்டு வருமென்றும் உறுதி கூறப்பட்டது.