பக்கம் எண் :

304விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆயினும், இந்து கலாச்சாரப் பயிற்சிக்கே  இதில்
சிறப்பிடம்  தரப்பட்டது: இதனைத் துவக்கும் பணியிலே காந்தியடிகள் துணை
நின்றார்.

      கவி ரவீந்திரநாத் தாகூர்,  தம்  தந்தையார்  நிறுவிய  'சாந்திநிகேதன்'
ஆசிரமத்தில்,  'விசுவ பாரதி'  என்ற  சர்வதேசப்  பல்கலைக்கழகம்  ஒன்றை
நிறுவினார்.   இதில்,   ஆங்கிலம்   பல  மொழிகளிலே  ஒருமொழியாகவே
பயிற்றுவிக்கப்படுகிறது.   இந்திய  மொழிகள்   மீது  ஆதிக்கம்   செலுத்தும்
மொழியாக  அனுமதிக்கப்படவில்லை.  பிரதேச  உரிமை  காரணமாக,  வங்க
மொழி சிறப்பிடம் பெற வழிவகுக்கப்பெற்றது.

      தாழ்த்தப்பட்டவர்களுக்குக்    கல்விதரும்   முயற்சிக்காக   நாட்டின்
பல்வேறிடங்களில்  பள்ளிகளும்  விடுதிகளும்   தொடங்கப்பெற்றன.   இந்த
முயற்சி விடுதலைப் போரின் ஒரு பகுதியாகவே நடைபெற்றது.

     சுவாமி  சகஜானந்தர்  என்ற  அரிசனத்   தேசியவாதி   சிதம்பரத்தில்
'நந்தனார்  பள்ளி'  என்ற பெயரில்  தாழ்த்தப்பட்ட மக்களுக்கெனத் தனியாக
ஒரு பள்ளியைத் துவக்கி நடத்தினார்.

     1925ல்    ராஜாஜி    அவர்கள்   சேலம்   மாவட்டத்தைச்   சார்ந்த
திருச்செங்கோட்டில்  'காந்தி  ஆசிரமம்'  தொடங்கினார்.  பல   ஆண்டுகள்
அங்கே தங்கி, கிராம மக்களின் கல்வி நலனுக்காக அரும்பாடுபட்டார்.

     பாரதம் முழுவதிலுமாகத் தேசியவாதிகள் கல்வித்துறையில் ஆற்றியுள்ள
தொண்டு ஒரு தனிநூல் எழுதுமளவுக்கு விரிவானதாகும்.

      இவ்வளவையும்  விடுதலைப்  போராட்டத்தின் நடுவிலேயே செய்தனர்.
ஆம்;  'வீடாறு மாதம்,  சிறை  ஆறு மாதம்' என்று சொல்லத்தக்க வகையில்,
வீட்டுக்கும்  சிறைக்குமாக  மாறி  மாறி துன்பவாழ்க்கை நடத்திய காலத்திலே,
தங்கள்  தாய்  மொழியின்  வளர்ச்சிக்காக   அரும்பாடு   பட்டனரென்றால்,
அதனை மறப்பது மதியுடைமையாகுமா?.

      இந்திய   விடுதலைப்போர்  அறவழியில்  நடைபெற்றதாலும்,   ஆக்க
வழிப்  பணிகளும்  போராட்டத் திட்டத்தின் ஒரு அங்கமாக  அமைந்ததாலும்
வலிமைமிக்க   ஒரு   வல்லரசை  எதிர்த்துப்   போராடிக்    கொண்டிருந்த
காலத்திலேயே  தாய்மொழி  வளர்ச்சிக்கும்   பாடுபட   இந்திய   விடுதலை
வீரர்களால் முடிந்தது. அவர்களுக்கு நாடு நன்றி செலுத்துமாக!