பக்கம் எண் :

306விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

ஏகாதிபத்தியத்தின் எதிரிகளான தேசியவாதிகளே அமைப்பதும் புரட்சிகரமான
முயற்சிகளாகும்.

      சென்னையைப்   பின்பற்றி   பாரதப்   பெருநாடு   முழுவதும்   பல்
வேறிடங்களில்-பல்வகைத் தொழிலாளர்களின்  நலன்களுக்கெனத் தொழிலாளர்
சங்கங்கள் தோன்றின. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து தொழிலாளர்களின்
பேரியக்கத்தை  உருவாக்கும்  பொருட்டாக,  'அகில  இந்தியத்  தொழிற்சங்க
காங்கிரஸ்'  என்ற  அமைப்பொன்றையும பண்டித  ஜவகர்லால் நேரு போன்ற
தேசியவாதிகள் 1920ல்  தோற்றுவித்தனர். அகில  இந்திய தேசியக்  காங்கிரஸ்
மகாசபையின்  நிழலிலே  அந்த  அமைப்பு பிறந்தது. விடுதலைப் போராட்டம்
முடியும்வரை   இந்த  இரண்டு  அமைப்புகளும்  ஒன்றை  ஒன்று  தழுவியே
பணிபுரிந்தன.

ருஷ்யப் புரட்சி

     இந்தியாவில்  தொழிலாளர் இயக்கம்  உருப்பெறுவதற்கும், ஏகாதிபத்திய
எதிர்ப்பின்  மற்றொரு  முனையாக  அது அமைவதற்கும் அந்தக்  காலத்தில்
ருஷ்யாவில்    நடைபெற்ற    வர்க்கப்    புரட்சியும்   ஒரு   தூண்டுதலாக
இருந்ததெனலாம்.

      1917 ஆம் ஆண்டில் நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் விளைவாகக்
கொடுங்கோலன்   ஜார்   ஆட்சி   அழிக்கப்பட்டு,  சோஷலிச மணம் வீசும்
சோவியத்   ருஷ்யா   பிறந்தது.   இதற்குப்  "புதிய ருஷ்யா"  எனப்  பெயர்
கொடுத்து  6  செய்யுள்கள்  இயற்றினார் தேசியக்கவி பாரதியார். பாரதியாரின்
இந்தப்  பாடல்  தொகுப்பு, சோஷலிச எழுச்சியின் விளைவாகத் தமிழ் மொழி
அடைந்த  மறுமலர்ச்சி  எனலாம்.  தமிழிலே சோசலிசக் கருத்துடைய கவிதை
இலக்கியத்தைப்   படைப்பதிலும்   முன்னோடியாகத்   திகழ்ந்தவர்  மகாகவி
பாரதியாரே யாவார்.

      "மாகாளி  பராசக்தி  உருசிய  நாட்டில் கடைக்கண் வைத்தாள்" என்று
தொடங்கும்  பாரதியாரின்  பாடல், தமிழ் இலக்கியக் களஞ்சியத்திற்கே தனிப்
பெருமை  தருவதாகும்.  ருஷ்யப்  புரட்சியைக்  கண்ணாரக்  கண்ட  ருஷ்ய
மொழிக்  கவிஞர்கூட,  இவ்வளவு எழுச்சிமிக்க பாடலைப் பாடினாரா என்பது
ஐயப்பாடே.   வர்க்கப்புரட்சிக்கு  எவ்வளவு  வலிமையுண்டோ,   அவ்வளவு
வலிமை  அந்தப்  புரட்சியைப்  புகழ்ந்து  பாடுவதற்குத்  தமிழ்  மொழிக்கும்
உண்டு என்பதனைப் பாரதியார் புலப்படுத்தியுள்ளார்.