பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 307

     பாரதியார்,    இந்தியாவில்   தேசிய   எழுச்சி   தோன்றிய  ஆரம்ப
ஆண்டுகளிலே,   தெய்வபக்தியையும்   தேசபக்தியையும்   கலந்து   கவிதை
புனைந்தார்.  ஆம்;  இந்தியாவின் ஆரம்பகாலத்  தேசியம் "இந்துத் தேசியம்"
தான்.   அதன்  மறுமலர்ச்சியாகவே  "இந்தியத்  தேசியம்  பிறந்தது,  காந்தி
சகாப்தத்திலே!  அதனையும்  எதிரொலிக்கும் வகையில் மதக்கலப்பற்ற தேசிய
கீதம்  பாடினார்  பாரதியார்.  பின்னர்,   1917  ஆம்  ஆண்டு   தொடங்கி
ருஷ்யாவில் வர்க்கப்போர் தோன்றி, அது  வெற்றி  பெற்றதன்  விளைவாக -
இந்தியப்   பெருநாட்டில்    உருவாகி   வந்த    சோசலிச  எழுச்சியையும்
எதிரொலிக்கும்  வகையில்  பல  பாடல்கள் பாடினார். அவை, 'புதிய ருஷ்யா',
'பாரத சமுதாயம்', 'சுதந்தரப் பள்ளு', 'விடுதலை' ஆகியனவாம்.

தோழர் சிங்காரவேலர்

      தோழர்   சிங்காரவேலு   செட்டியார்,   அரசியல்    விடுதலையிலே
பொருளாதார  விடுதலையும்   கலந்திருக்க   வேண்டும்  என்று  விரும்பிய
புரட்சிவாதியாவார்.   அவர்,   அகிம்சைப்   புரட்சியிலே  நம்பிக்கையிழந்து,
ஆயுதப்  புரட்சியை   விரும்பினார். அதனால்,  அரசியல்  விடுதலைக்காகப்
பாடுபட்டு  வந்த  தேசியவாதிகளிடையே  விஞ்ஞான  ரீதியான   சோசலிசக்
கருத்தையும்  பரப்பி,  தமிழ்  மொழியிலே  சோசலிச இலக்கியங்கள் தோன்ற வழிவகுத்தார்.  அப்பெரியாரின் புரட்சிகரமான போதனைகளும் சாதனைகளும் பிற்காலத்  தேசியவாதிகளால்  திரையிடப்பட்டுவிட்டன.  எதிர்காலத்திலேனும்
அந்தத்  திரை  அகற்றப்பட்டு,  தமிழ்   இனத்தவரின்   வாழ்வுக்கும்  தமிழ்
மொழியின்  வளர்ச்சிக்கும் தோழர் சிங்காரவேலர் ஆற்றியுள்ள அரும்பணிகள் மக்களால் போற்றப்படுமென்று நம்புவோமாக.

      திரு.வி.கலியாணசுந்தரனார்,   எந்த   அளவுக்குத்   தமிழ்   மொழிப்
புலவராக-தேசியத் தலைவராக விளங்கினாரோ, அந்த அளவுக்கும் அதிகமாக,
கார்ல்    மார்க்ஸின்   பொதுவுடைமைத்   தத்துவத்தில்   நம்பிக்கையுடைய
தொழிலாளர் இயக்கத் தலைவராகவும் விளங்கினார். தேசிய  அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த  காலத்திலும்  தொழிலாளர்   அரசியலிலிருந்து   ஒதுங்காமல்
அதனோடு  உறவு  கொண்டிருந்தார் திரு.வி.க. அப்பெரியார், தாம் விஞ்ஞான
ரீதியான  சோசலிசத்தில்  நம்பிக்கை  கொண்டதற்குத்  தோழர் சிங்காரவேல்
செட்டியாரின் போதனைகளே காரணமென்கிறார்.