சமூக சீர்திருத்த இலக்கியம் விடுதலைப் போராட்ட காலத்தில் சமய சமூக சீர்திருத்தப்
பணிகளிலேயும் தேசியவாதிகள் ஈடுபட்டனர், தீண்டாமை விலக்கு, மது
விலக்கு, குழந்தை மண எதிர்ப்பு, கலப்பு மணம், விதவா விவாகம், விபசார
ஒழிப்பு, கடவுள் பெயரால் உயிர்ப்பலி இடுதலைத் தடுத்தல் ஆகிய பணிகளில்
பங்கு கொள்ளாத தேசியவாதிகள் அரிதென்பது சொல்லி விடாலம். இந்த
சமய-சமூக சீர்திருத்தப் பணிகளின் விளைவாகவும் பிரதேச மொழிகளிலே
கவிதை-கதை-நாடக இலக்கியங்கள் தோன்றின. இந்தச் சீர்திருத்தத்
துறைகளிலேயும் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிடும் கவிதைகளையும்
கதைகளையும் கட்டுரைகளையும் எழுதுவதில் தேசியக்கவி பாரதியாரே
முன்னோடியாக விளங்கினார்.
தேசிய காங்கிரஸ் மகாசபை தோன்றிய ஆரம்ப ஆண்டுகளிலே,
ஆண்டுதோறும் கூடும் காங்கிரஸ் மகாசபையின் பந்தலிலேயே சமூக
சீர்திருத்த மாநாடும் நடைபெற்று வந்தது. அந்நாளைய தேசியவாதிகளில்
தலைசிறந்தவரான திரு.மகாதேவ கோவிந்த ரானடே என்பார், மற்ற
தேசியவாதிகளுக்கு வழிகாட்டும் வகையில் சீர்திருத்த மாநாடுகள்
நடத்துவதிலே மிகுந்த ஆர்வங்காட்டி முன்னோடியாக விளங்கினார்.
காந்தி சகாப்தத்திலேதான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களான
தேசியவாதிகள் மிகவும் பிற்போக்கான வைதிகத்தையும் எதிர்க்கும்
சீர்திருத்தப் பணியிலே அதிகமாகக் கருத்துச் செலுத்தினர்.
தீண்டாமை விலக்கு, விதவாவிவாகம், குழந்தை மண எதிர்ப்பு,
மதுவிலக்கு, இன்ன பிற சீர்திருத்தம் பற்றி காந்தியடிகள் அவ்வப்போது
இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியும் பேசியும் வெளியிட்ட கருத்துக்கள்
எல்லாம் தமிழ் உள்ளிட்ட பிரதேச மொழிகளிலேயும் வெளியாகியுள்ளன.
அந்தக் கருத்தோவியங்கள் பிரதேச மொழிகளுக்குக் கிடைத்த புத்தம் புதிய
செல்வங்கள் என்று சொல்லலாம்.
தமிழ் நாட்டிலேயும் தமிழ் மாகாண காங்கிரஸ் கூடும் போதெல்லாம்
சமூக சீர்திருத்த மாநாடும் நடைபெறுவது 1918 வரை வழக்கமாக இருந்து
வந்திருக்கின்றது.