களிலே அடையாறு தியாசாபிகல் கங்கத்தைச் சார்ந்த டாக்டர் அருண்டேல்- ருக்மணி திருமணமும் ஒன்றாகும். இத்திருமணம் அந்நாளில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது. வைதிகர்களான தேசியவாதிகளேயன்றி, ஓரளவு சீர்திருத்த மனப்பான்மையுடைய தேசிய மாவீரரான வ.உ.சிதம்பரனாரும், டாக்டர் அருண்டேல்-ருக்மணி கலப்புத் திருமணத்தை எதிர்த்தார். காரணம், மணமகன் ஐரோப்பியராக இருந்ததுதான். அந்நாளில் விடுதலை வீரர்களிலே பலர் வெள்ளை நிறத்தவரை விரோதிகளாகவே கருதினர். ஆம்; ஏகாதி பத்தியத்துவேஷமானது நிறுத்துவேஷமாகவும் இருந்து வந்தது. ஆனால், தமிழ்ப்பெரியார் திரு.வி.க., ஐரோப்பியரான டாக்டர் அருண்டேலுக்கும் அந்தணப்பெண்மணியான ருக்மணிக்கும் நடந்த கலப்புத் திருமணத்தை ஆதரித்துத் தனது 'நவசக்தி' வார இதழிலே தலையங்கம் எழுதினார். இப்படி, சீர்திருத்த இயக்கத்தை ஆதரித்துத் திரு.வி.க. எழுதிய நூல்கள் பலவாகும். அவற்றில் தலைசிறந்தது "பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை" என்னும் நூலாகும். 'இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்', 'சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து', 'சைவத்தின் சமரசம்', 'பொதுமை வேட்டல்' ஆகிய நூல்களிலேயும் அந்நாளைய தேசிவாதிகளின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை வெளியிட்டுள்ளார். சி.சுப்பிரமணிய பாரதியார், தமிழ் மக்களுக்கிருந்த-குறிப்பாக, இந்து சமயத் தமிழர்களுக்கிருந்த, மூடநம்பிக்கைகளைக் கடுமையாகத்தாக்கி, எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார். அவருடைய சீர்திருத்தப் பாடல்கள் வைதிகக் கோட்டைமீது வீசப்பட்ட வெடிகுண்டுகள் எனலாம். பிறப்பால் அந்தணரான அவர், எம்மதமும் சம்மதம் எனக்கொண்டு, சமயப் பூசல்களை எதிர்த்தார். உயர்வு தாழ்வுடைய சாதி வேற்றுமைகளைச் சாடிப் பாடினார். அந்தப் பாடல்களெல்லாம் தமிழ் இலக்கியக் களஞ்சியத்திற்கு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிடைத்த புதிய வரவுகளாகும் 'பாரதியாரின் கட்டுரைகள்' என்னும் நூலிலேயும், தேசியவாதிகளில் முற்போக்கானவர்கள் கொண்டிருந்த புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்துக்களைக் காணலாம். திருவள்ளுவர், ஒளவையார் போன்ற பண்டைப் புலவர்களின் இலக்கியங்களிலே இலைமறைகாயெனக் காணப்படும் சீர்திருத்தக் கருத்துக்களையும் எடுத்துக் காட்டினார். |