கருத்துக்களை வெளியிட்டு வந்தார். சற்றேறக்குறைய ஆரிய சமாஜத்தின் நிலையும் இதுதான். விடுதலைப்போரின் முன்னணித்தலைவர்களாக விளங்கிய லாலா லஜபதி ராய், பண்டித கோவிந்த வல்லப பந்த் ஆகியோர் தேசியப் பாசறையில் இருந்து கொண்டே ஆரிய சமாஜத்திலும், அங்கம் வகித்தனர். பிரம்ம சமாஜத்தாரிலேயும், இராமகிருஷ்ண சங்காத்தாரிலேயும் பலர் விடுதலைப் போரில் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். துருதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டிலே சீர்திருத்தப் பாசறையாகத் தோன்றிய சுயமரியாதை இயக்கமும் விடுதலைப் பாசறையும் ஒன்றை ஒன்று தழுவி நிற்காமல் பரஸ்பரம் பகை முகாம்களாக விளங்கின. இதற்குக் காரணம் எதுவாயினும் சரி; காரணமானவர்கள் யாராயினும் சரி; இந்த இருவேறு இயக்கங்களிடையே நிலவிய பகைமையால் தமிழ் இனத்திற்கு விளைந்த கேடுகள் பலவாகும். அவற்றை இங்கு ஆராய்வதால் பயனில்லை. ஆகவே, அந்த ஆராய்ச்சியை விட்டு, சுயமரியாதை இயக்கத்தால் தமிழ்மொழிக்கு ஏற்பட்ட நல்ல பலன்களை மட்டும் இங்கு எடுத்துக் காட்டுவோம். சுயமரியாதைக் கிளர்ச்சியால்...... சுயமரியாதை இயக்கத்தால் தனித்தமிழ்க் கொள்கையாளர் வலுப்பெற்றனர். தமிழில் கலந்த வடமொழிச் சொற்களை அகற்றி தனித் தமிழிலேயே எழுதவும் பேசவும் வேண்டுமென்ற, ஆர்வம் தமிழரிடையே வளர்ந்தது. வடமொழிக் காப்பியங்களை முதல் நூல்களாகக் கொண்டு தமிழில் தோன்றிய கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்ற வழி நூல்களை வெறுத்தொதுக்கும் உணர்ச்சியை மக்களிடையே வளர்க்க முயன்றனர் சுயமரியாதை இயக்கத்தார். அது வெற்றி தரவில்லை. ஆனால், திருக்குறள், புறநானூறு, அகநானூறு போன்ற சங்க இலக்கியங்களை விரும்பிப் பயிலும் புது உணர்வு தமிழ் இளைஞர்களிடையே ஏற்பட்டது. தமிழிலுள்ள புராணக் காப்பியங்களையும் நாடகங்களையும் திருத்தியும் அவற்றிலுள்ள கருத்துக்களை மறுத்தும் வரையப்பட்ட புதிய காவியங்களும் நாடகங்களும் தோன்றின. அவற்றுள் புலவர் குழந்தை எழுதிய "இராவண காவிய"மும், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களால் தயாரிக்கப்பட்ட "கிந்தனார்" கதா காலடல் |