பிரசாரத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த - பெரியார் ஈ.வே.ரா. வின்
தலைமையிலிருந்த - சுயமரியாதை இயக்கம் கட்டாய இந்தி எதிர்ப்பில்
ஈடுபட்டது. சுயமரியாதைக்காரர்கள் கட்டாய இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதன்
விளைவாக, தாய்மொழிப்பற்றுடைய புலவர் பெருமக்களிலே பலருக்கும்
அவர்களுக்கு மிடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. அதனால், 'இந்நி ஒழிக'
என்று கோஷித்த சுயமரியாதைத் தொண்டர்கள், 'தமிழ் வாழ்க' எனவும்
கோஷிக்கலாயினர். இந்தி மொழி வளமற்றது - வரலாற்றுச் சிறப்பற்றது
என்பதைத் தமிழ் மக்களுக்கு உணர்த்தியதோடு, தமிழ் மொழியின்
வளத்தையும் வரலாற்றுச்சிறப்பையும் மேடைதோறும் எடுத்துக்கூற
வேண்டியவர்களாயினர். தமிழர்பேசும்மொழியை, 'தமிழ் அன்னை' -
'தமிழ்த்தெய்வம்' என்றெல்லாம் புராண பாணியில் வருணிக்கலாயினர்.
'மனோன்மணீயம்' நாடக நூலினுள் சுந்தரனார் பாடியுள்ள 'நீராருங்
கடலுடுத்த' - 'பல்லுயிரும் பலவுலகும்' என்ற 'தமிழ்த் தெய்வ வணக்கப் பாடல்’களையும் பயன்படுத்தினர்.
கட்டாய இந்தி எதிர்ப்பு இயக்கம் வலுத்ததன் காரணமாக, தமிழ்
மொழியிடத்துப் பற்றுடைய தேசபக்தர்களிலே சிலர் - உணர்ச்சி
வயப்பட்டவர்களாகி-தேசியப் பாசறையிலிருந்து வெளியேறினர்.
இந்த மாறுதலைத்தான் விடுதலைப் போராட்டத்தின் மத்தியிலே தமிழ்
மாநில காங்கிரசுக்கு மட்டும் ஏற்பட்ட-பிற மொழி மாநிலங்களில் ஏற்படாத -
துரதிர்ஷ்டமான சூழ்நிலை என்றேன்.
அந்நாளில், விடுதலைப்போரை நடத்தி வந்த காரணத்தால்,
காங்கிரசுக்குத் தமிழக மக்கள் மீது எல்லையற்ற செல்வாக்கு இருந்தது.
புனிதர் காந்தியடிகள் தலைமையும் பிறகட்சிகளால் அழித்தொழிக்க இயலாத
பேராற்றலை அதற்குத் தந்தது. இவற்றால், இன்று இந்தித் திணிப்பைத் தார்மீக
ரீதியிலேனும் வெறுத்து வருகின்ற தமிழ்நாடு காங்கிரஸ், அன்று
முரட்டுத்தனமாக ஆதரவுகாட்டியது. காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்கள்
பலவற்றிலே இந்தி பயிற்றுவிக்கும் வகுப்புகள் நடத்தப்பெற்றன.
டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த 'தினமணி'
நாளிதழிலே இந்திமொழி பாடம் நடத்தப்பெற்றது. 'இந்தி படித்துவிட்டால்
சமஸ்கிருதம் தானாக வரும்' என்று கூட காங்கிரஸ் பெருந்தலைவர்களிலே
சிலர் பேசினர்.