சுயமரியாதை இயக்க மேடைகளிலே இந்தி மொழி தூற்றப் பட்ட
தென்றால், காங்கிரஸ் மேடைகளிலே இந்தி போற்றப்பட்டது. அம் மொழியிலே
வீரமூட்டும் கதைகளும் கவிதைகளும் இருக்கின்றனவென்றும் வருணித்துப்
பேசினர் சில காங்கிரஸ்காரர்கள்.
தெனாலிராமன் பூனையாக....
தெனாலிராமன் கொடுத்த கொதிக்கக் காய்ச்சிய பாலைக் குடித்து வாயை
வேகடித்துக்கொண்ட பூனையானது, அதற்குப்பின் பாலையே
வெறுத்துவிட்டதாக ஒரு கதை உண்டு. அதுபோல, தேசவிடுதலைப்போருக்கு
எதிராக இருந்த சுயமரியாதை இயக்கத்தார் தமிழ்ப்பற்றையும் 'தமிழர்' என்ற
இன உணர்வையும் பயன்படுத்திக் காங்கிரசை எதிர்த்ததால், அந்த
இரண்டையும் வெறுக்கலாயினர் காங்கிரஸ்காரர்கள். தேசியவாதிகளிலே
எவரேனும்தமிழ்ப்பற்றுடையோராக - 'தமிழர்' என்ற இனவுணர்வுடையோராக
இருந்து விட்டால், அவருடைய தேசபக்திகூட சந்தேகிக்கப்பட்டது. காங்கிரஸ்காரர்களின் இந்தப்போக்கு எனக்குப் பிடிக்கவில்லை.
சுயமரியாதைக்காரர்களின் தமிழ்ப்பற்று எனக்குப் பிடித்திருந்தாலும்,
அந்தப் பற்றுதல் காரணமாக, தமிழ்மக்களிடையே தங்களுக்குக் கிடைத்த
செல்வாக்கை தேசவிடுதலைப்போருக்கும் தேசிய ஒருமைப்பாட்டுணர்வுக்கும்
எதிராக அவர்கள் பயன்படுத்தியதை நான் அடியோடு வெறுத்தேன்.
அந்நாளில் நான் கட்சிப்பற்றுடைய காங்கிரஸ்காரன். காங்கிரசை
விரோதிப்பவர்களை யெல்லாம் என் சொந்த விரோதிகளாகக் கருதுமளவுக்கு
என் மனத்தில் கட்சிப்பற்று வளர்ந்தும் வலுத்தும் இருந்தது. அதே அளவில்
தாய்மொழிப்பற்றும் 'தமிழன்' என்ற இனஉணர்வும் என்மீது ஆதிக்கஞ்
செலுத்தின. இதனால், நான் இருதலைக்கொள்ளியிடையே அகப்பட்ட
எறும்புபோலானேன். ஆயினும், காங்கிரஸ்காரர்கள் கடை பிடித்த
தேசப்பற்றுக்கும் சுயமரியாதை இயக்கத்தார் போதித்த தாய்மொழிப்
பற்றுக்குமிடையே சமரசங் காண்பதைக் கொள்கையாகக் கொண்டேன்.
பாரதியாரின் போதனையும் காந்தியடிகளின் சாதனையும் அதுவாகவே
இருந்ததால், எனது கொள்கை தேசிய விரோதமானதென்று நான் கருதவில்லை.
தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடுவதிலே தமிழ்நாடு காங்கிரசை முழு மூச்சுடன்
ஈடுபடுத்திவிட முடியுமென்றும் நம்பினேன்.