தொடக்கத்தில் காங்கிரஸ் மேடைக்கு வரத் திரு.வி.க. சிறிது தயங்கினா
ரென்றாலும், பின்னர், நான் அழைத்தபோதெல்லாம் தவறாமல் வந்து எனது
தமிழ்ப்பணிக்குத் துணை புரிந்தார். பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அப்போது காங்கிரசில்
இருந்தாரென்றாலும், காங்கிரஸ்காரர்கள் அவரைச் சரியாகப் பயன்படுத்திக்
கொண்டார்களில்லை. அவரைத் தமிழ்ப்புலவராக மட்டுமே மதித்துப்
புறக்கணித்தனர். நான் அவரைப் பொது விழாக்களுக்கு மட்டு மல்லாமல்,
காங்கிரஸ் கட்சிப் பிரசார மேடைகளுக்கும் அழைத்தேன். 1939ல் சென்னை
முதல் வட்ட (தண்டையார் பேட்டை)க் காங்கிரஸ் மாநாட்டிலும் தலைமை
வகிக்கச் செய்தேன். 1941ல் நடந்த தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு
அவர் 5 மாதம் சிறைசென்றதற்கு எனது தூண்டுதலும் ஒரு காரணமாகும்.
தமிழ்மொழியில் பெரும் புலமை பெற்றவரும் ஏகாதிபத்தியக் கப்பலுக்கு
எதிர்க்கப்பலோட்டியவருமான வ.உ.சிதம்பரனார், காங்கிரஸ் வட்டாரத்தினரால்
சரியானபடி போற்றப் படவில்லை. வேண்டுமென்றே புறக்கணிக்கவும் படுகிறார்
என்ற குறை சரியாகவோ, தவறாகவோ எனக்கு இருந்தது. அதனால்,
இராயப்பேட்டை காங்கிரஸ் மண்டபத்தில் (தற்போது சத்திய மூர்த்திபவன்)
நுழைவாயிலின் ஒரு புறத்தில் அவரது உருவச்சிலையை நிறுவத் திட்டமிட்டு,
அதனை 1939 ஜனவரி 21ல் நடத்தி வைத்தேன். அந்த விழாவிலே
காங்கிரசுக்கு வெளியேயிருந்த திரு.வி.கலியாணசுந்தரனார், டாக்டர் வரதராசுலு
நாயுடு, வி.சர்க்கரைச் செட்டியார் ஆகியோரும் கலந்துகொள்ளச் செய்தேன்.
வ.உ.சி. மறைந்த நாளான நவம்பர் 18ல், ஆண்டுதோறும் சென்னை மாவட்ட
காங்கிரஸ் சார்பில் நினைவுநாள் கூட்டம் நடத்தினேன்.
அதனையடுத்து, வ.உ.சிதம்பரனாரின் வரலாற்றையும் - மிகவும் பாடுபட்டு
முயன்று, தகவல்களைச் சேகரித்து-நானே எழுதி நூலாக்கி வெளியிட்டதோடு,
அவரது உருவப்படத்தையும் 'தமிழ்ப்பண்ணை'யைக் கொண்டு வெளியிடச்
செய்தேன்.
நாமக்கல் கவிஞரின் புலமையிலே எனக்குப் பெருமதிப்பு
உண்டு. அவரது புகழைத் தமிழ்நாடு முழுவதும் பரப்பக் கங்கணங்
கட்டிக்கொண்டு பாடுபட்டேன். அந்நாளில், 'பிரார்த்தனை' என்ற
பெயரிலே அவருடையதேசியப் பாடல்கள் தொகுக்கப்பட்டு,