பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 323

வெளியாகியிருந்தது.  அதனைப் பள்ளிகளிலே துணைப்பாடமாக வைப்பதற்கும்
பாடுபட்டேன்.

     1939ல் வடசென்னை  (முதல் சர்க்கிள்)  காங்கிரஸ்  மாநாட்டினை மிகச்
சிறப்பாக நடத்தி, அதனை நாமக்கல் கவிஞரைக் கொண்டு தொடங்கி வைக்கச்
செய்தேன்.  தமிழ்க்  கவிஞர்  ஒருவரைக்  கொண்டு  தலைநகரில்  அரசியல்
மாநாடொன்றை நடத்தி விட்டதற்காகப் பெருமிதம் அடைந்தேன்.

     அந்நாளில்  பாடல்கள்  எழுதித்தரும்படி  நாமக்கல்  கவிஞருக்கு நான்
அடிக்கடி  கடிதமூலம்  வேண்டுகோள்  விடுவேன்.  நான் வேண்டிக்கொண்ட
போதெல்லாம்  அவர்  தவறாமல்  பாடல்கள்  எழுதி  அனுப்புவார்.  அவை
நாளிதழ்களில்  வெளிவரவும்  ஏற்பாடு செய்வேன். சென்னை லிட்டில் பிளவர்
கம்பெனியார் வெளியிட்டுள்ள "நாமக்கல் கவிஞர் பாடல்கள்" தொகுப்பு நூலில்
காந்தியடிகள்,  வ.உ.சிதம்பரனார்,    பாரதியார்  ஆகியோரைப்   பற்றியுள்ள
பாடல்களெல்லாம்  நான்  வேண்டிக்  கொண்டதன்  பேரில்  கவிஞர் எனக்கு
எழுதி அனுப்பியவையாகும்.

     தேசியக்கவி  பாரதியார் ஆவி  நீத்த செப்டம்பர் 11ஐ அவரது நினைவு
நாளாக   சென்னை  மகாஜன   சபையும்  பாரதி  பிரசுராலயமும்  மட்டுமே
அந்நாளில்   கொண்டாடி   வந்தன.   முதன்முதலாக,  சென்னை  மாவட்ட
காங்கிரஸ்  கமிட்டியின் பெயரால்  1938, 'பாரதி வாரம்' கொண்டாட ஏற்பாடு
செய்தேன்.  காங்கிரசல்லாத  தேசியப்  பற்றுடைய  தமிழ்த் தலைவர்களையும்
அழைத்துப் பேசச் செய்தேன்.

     திருமதி.நீலாவதி ராம சுப்பிரமணியம் அவர்கள், ஒரு காலத்தில் பழுத்த
சுயமரியாதைக்காரர்.    பின்னால்,    டி.கே.சி.யின்   புலமையிலே   மயங்கி
கம்பராமாயண  பக்தையானார்.  காங்கிரசிலும் சேர்ந்தார்.  அவர்  காங்கிரஸ்
பணிகளிலே  முதலிடம்  பெறச்  செய்தேன்.  அவர்,  1941ல் நடந்த தனிநபர்
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுச் சிறைபுகவும் காரணமாக இருந்தேன். ஆம்; தமிழ்
மொழியிடத்து   அம்மையாருக்குள்ள   பற்றும்   பயிற்சியுமே   அவருக்குக்
காங்கிரசிலே முதலிடம் தேடித்தர நான் பாடுபடுவதற்குக் காரணமாயின.

     இவ்வளவுக்கும்      காரணம்,     தமிழ்நாடு   காங்கிரசைத் தமிழ்மய
மாக்கிவிட வேண்டும்,     தேச பக்திக்கும்      தமிழ்ப்பற்றுக்கும் பாரதியார்
ஏற்படுத்திய       உறவை     மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதுதான்.