பற்றுக்கும் தேசப்பற்றுக்கும் உறவுகாணும் புனிதப் பணியைத்
தொடர்ந்து செய்து வந்தேன். ஆம்; 1938 முதல் 1941 வரை! இந்த நிலையில், 1942 ஆகஸ்டு 9ல் இந்திய விடுதலைக்கான
இறுதிப்போர் தோன்றியது! அதன் விளைவாக, ஆகஸ்டு 13ல் நான்
பாதுகாப்புக் கைதியாக்கப்பட்டு, சுமார் 18 மாத காலம் மாறிமாறி சென்னை,
வேலூர், அமராவதி(ம.பி), தஞ்சைச் சிறைகளில் அடைக்கப்பட்டேன்.
சிறைச்சாலை கலாசாலையானது!
ஆகஸ்டுப் புரட்சியின் போது - பாதுகாப்புக் கைதியாக நான்
'சிறை வாழ்க்கை' நடத்திய போது தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து பயில
வாய்ப்புப் பெற்றேன். பெற்றோருடைய வற்புறுத்தலாலோ, வேலை தேடி
வாழ்க்கை நடத்துவதற்காகவோ இலக்கியம் பயின்று பட்டம் பெறுவோர் நிலை
வேறு. 39 வயதுக்குப் பின்னர்-சமுதாயத்திலுள்ள மேடுபள்ளங்களை அறிந்து
அனுபவம் பெற்ற நிலையில், விடுதலை வெறி பிடித்த மறவனாக ஏகாதிபத்திய
எதிர்ப்பாளனாக-இரும்புக் கம்பிகளினூடே சிறையில் அடைப்பட்ட நிலையிலே
இலக்கியம் பயின்ற எனது நிலைவேறு. சிறையிலே இலக்கியம் பயின்று யான்
பெற்ற அறிவு வேறு எவரும் எளிதில் பெற்றுவிடக் கூடியதன்று.
இலக்கியங்களை நான் பார்த்த பார்வையே வேறு. சங்க இலக்கியங்களை
ஆசிரியரிடம் பாடங்கேட்காமல் பயில்வதென்பது பிறரால் நினைத்துப்
பார்க்கவும் முடியாததாக இருக்கலாம். ஆனால், எனக்கு நானே ஆசானாக
இருந்துகொண்டு சங்க இலக்கியங்களைப் பயின்றேன்.
வேங்கடமும் குமரியும் தமிழகத்தின் எல்லைகள் எனக்கூறும்
செய்திகளை இலக்கிய ஏடுகளில் படித்தபோதெல்லாம் அவை இன்றும்
தமிழகத்தின் எல்லைகளாக இருக்கின்றனவா என்று ஒருகணம் எண்ணிப்
பார்ப்பேன். இல்லை என்பதனை உணரும்போது மிகுந்த ஏமாற்றமடைவேன்.
இன்பத் தமிழின் பெருமைகளை எல்லாம் அறிந்து கொள்ளும்
வாய்ப்புப் பெற்ற ஒவ்வொரு நேரத்திலும் அந்த மொழி இன்று
தமிழ்மக்களின் வாழ்க்கையிலே முதலிடம் பெற்றிராத நிலையை
நினைத்துக் கண்கலங்குவேன்., வெட்கமும் வேதனையும் கூட
என் மனதில் மாறிமாறி ஏற்படும். சிறை வாழ்க்கையில் நான்