இலக்கியம் படித்தநாட்களிலே, சிறையிலிருந்து வெளிப்பட்டால் என்னென்ன
வெல்லாமோ செய்யவேண்டுமென்று எனது நாட்குறிப்புப் புத்தகத்தில் குறித்து
வைத்துக்கொள்வேன். திரும்பவும் வடக்கெல்லையை வேங்கடமாகவும்,
தெற்கெல்லையைக் குமரிமுனையாகவும் கொண்ட புதிய தமிழகம் அமைத்தே
தீருவதென்று உன் உள்ளம் சபதமெடுக்கும். ஆங்கிலராட்சி வெளியேறும்
நாளிலேயே ஆங்கில மொழியின் ஆதிக்கத்தையும் வெளியேற்றியே
தீரவேண்டுமென்று என் உள்ளம் உறுதிகொள்ளும்.புதிய தமிழகம் படைக்க...
சேரமுனி செய்த சிலப்பதிகாரத்தை நான் பார்த்தபோது -கண்ணிகியின்
வீரச்செயல்களைக் கூறும் காதைகளை வரிவரியாகச் சிறையில் நான்
படித்தபோது-என்னை அறியாமலேயே பிரெஞ்சு நாட்டின் விடுதலைக்குப்
பாடுபட்ட ஆர்க்ஜோன் அம்மையாரும், இந்திய சிப்பாய் புரட்சியில் ஈடுபட்டு
வீரப்போர் புரிந்து சொர்க்கம் புகுந்த ஜான்சி ராணியாரும் என் நினைவுக்கு
வருவார்கள். ஆம்; கண்ணகியின் வீரப்புரட்சியை இன்னமும் முடிவுபெறாத
ஒரு நிகழ்ச்சியாகவே நான் நினைத்தேன்.
இப்படி, என் உள்ளம் பொங்குமாங்கடல் போலப்பொங்கி, எண்ண
அலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக எழுந்து மோதி அமைதியைக் குலைத்தன.
உணர்ச்சிப் பெருக்கால் என் உடல் அழல்மயமாயின. அதனால் கடுமையாக
நோய்வாய்ப்பட்டேன். பாரதி பாடினானே "சிந்தை தெளிவாக்கு -அல்லால்
இதைச் செத்த உடலாக்கு" என்று. அந்த வரிகளைச் சொல்லி சொல்லி
ஆறுதலடைவேன். சிறையிலே யான் படித்த இலக்கியப் படிப்பானது என்னை
ஒரு புதிய மனிதனாக்கியது.
புதிய தமிழகம் காண்பதென்ற விரதத்தை மேற்கொண்டவனாக 1944
ஜனவரித் திங்களில் சிறையிலிருந்து நான் மருத்துவர் ஆலோசனையின் பேரில்
நிபந்தனையின்றி விடுதலைசெய்யப் பட்டேன்.
விடுதலைக்குப் பின்னரும் இலக்கியப் படிப்பைத் தொடர்ந்தேன். நான்
சார்ந்திருந்த காங்கிரசைப் பயன்படுத்திப் புதிய தமிழகம் படைக்கும் பணியில்
ஈடுபடுவதென்ற பழைய பணியைத் தொடர முடிவெடுத்தேன். தமிழரிடையே
தமிழ்ப்பற்றுதலை வளர்க்கவும் 'தமிழன்' என்னும் இன உணர்ச்சியைப்
பெருக்கவும் தமிழ்நாடு காங்கிரசைப் பயன்படுத்த முடியுமென்றும் நம்பினேன்.