1945 ஆம் ஆண்டு - ஜனவரித் திங்கள் என்று நினைப்பு -திருச்சி
மாவட்டத்தைச் சார்ந்த அரியலூரில் அப்போது சிறைக்கு வெளியேயிருந்த
தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் மாநாடு கூட்டினார்கள். காங்கிரஸ் கமிட்டி சட்ட
விரோதமாக்கப்பட்டிருந்ததால் "காங்கிரஸ் சங்கம்" என்னும் பெயரிலே மாநாடு
நடைபெற்றது. திரு.எஸ்.கே.பாடில் அதன் தலைவராக அமர்ந்தார். அப்போது
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. கு. காமராசர் சிறையிலிருந்தார்.
உடற்பிணி காரணமாக விடுதலையாயிருந்த திரு.சி.என். முத்துரங்க முதலியார்
அரியலூர் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்தார்.
முதல் முயற்சி முறிந்தது!
காங்கிரசிலே இந்திமொழி வளர்க்க "தக்ஷிண பாரத இந்திப் பிரச்சார
சபை" என்று தனியாக ஒரு அமைப்பு இருப்பதுபோல, தமிழ்மொழியை
வளர்க்கவும் "தமிழ் வளர்ச்சிக் கழகம்" ஒன்று தமிழ்நாடு காங்கிரசின்.
கிளையாக அமைக்கப் பெறவேண்டுமென்று நான் கருதினேன்.
காங்கிரஸ்கார்கள் என் கருத்தை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என்றும்
நான் நம்பினேன்.
அரியலூரில் கூடிய தமிழ்நாடு காங்கிரசிலே என் கருத்தை ஒட்டி ஒரு
தீர்மானமும் கொடுத்தேன். ஆனால், மாநாட்டை முன் நின்று நடத்தியவர்கள்
என் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அனுமதி தர மறுத்தார்கள்.
அன்றுதான் முதன்முதலாக ஒன்றிரு காங்கிரஸ் பிரமுகர்கள் "கிராமணியார்
கதராடையிலே புகுந்த கறுப்புச் சட்டைக்காரர்" என்று சொன்னதை என்
காதுகளாலேயே கேட்டேன். அரியலூரிலிருந்து சென்னை திரும்பிய பின்னர்,
காங்கிரஸ் சங்க மாநாட்டிலே தமிழ் வளர்ச்சிக் கழகம் அமைக்கக்கோரி நான்
தீர்மானம் கொடுத்ததையும், மாநாட்டு நிர்வாகிகள் அதனை ஏற்க
மறுத்ததையும் விளக்கிக் கூறி, பத்திரிகைகளில் ஒரு அறிக்கை வெளியிட்டேன்.
எனது முயற்சிக்கு வெற்றிதேட நான் தொடர்ந்து பாடுபடப்போவதாகவும்
அதில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நான் நினைத்தது நடக்கவில்லை.
தமிழ்நாடு காங்கிரசின் ஆதரவைப்பெற்றே - அதன் கிளையாகவே - தமிழ்
வளர்ச்சிக் கழகம் அமைப்பதோ, அதனைக் கொண்டு தமிழ் மொழியின்
வளர்ச்சிக்குப் பாடுபடுவதோ சாத்தியமில்லை என்பதனை உணர்ந்தேன்.
அதன் பின்னர், 1946 நவம்பர் 21ல் என்னோடு நட்புக் கொண்
டிருந்த-தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதிலே ஆர்வமுடைய