காங்கிரசுக்குள்ளே தமிழ் வளர்ச்சிக்கழகம் அமைக்க எனக்கு ஆதரவு
கிடைக்கவில்லை யென்றாலும், காங்கிரசுக்கு வெளியே 'தமிழரசுக் கழகம்'
அமைக்க நான் முயன்றபோது திரு.கு.காமராசர், டாக்டர் ப. சுப்பராயன்,
டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோருள்ளிட்ட பலருடைய ஆதரவு கிடைத்தது.
ஆம்; தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் முன்னணித் தலைவர்களிலே பலரும்
ஊழியர்களில் ஏராளமானவர்களும் எனக்கு ஆதரவு தந்தனர்.
தேசியப்பத்திரிகைகள், தமிழரசுக் கழகத் துவக்கவிழாவையொட்டி
நல்லெண்ணத்தை வெளிபடுத்தித் தலையங்கம் எழுதின.
தேசியப் பாசறைக்கு வெளியேயும் நான் கொஞ்சங்கூட எதிர்பாராத
வகையில் எனது முயற்சிக்குப் பேராதரவு கிடைத்தது. அப்போது, நான் நடத்தி
வந்த 'தமிழ் முரசு' மாதப் பத்திரிகையில் தேசிய உணர்வோடு 'தமிழன்' என்ற
இனவுணர்வையும் வெளிப்படுத்தி நான் எழுதிய கட்டுரைகள் பெரிதும்
வரவேற்கப்பட்டன.
அண்ணா அவர்கள், அப்போது தாம் நடத்தி வந்த 'திராவிட நாடு' வார
இதழில் என் முயற்சிக்கு மிகுந்த உற்சாகத்துடன் ஆதரவுகாட்டி அடுத்தடுத்து
இருமுறை சிறப்புப் குறிப்புகள் எழுதினார்.
இவ்வளவும் பாரதத்தின் விடுதலை நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில்
நடந்தவையாகும்.
விடுதலைக்குப் பின்...
கழகம் தோன்றிய சில தினங்களுக்குள்ளேயே பாரதப் பெருநாடு
விடுதலை பெற்றுவிட்டது. ஆகவே, முற்றிலும் புதிய சூழ்நிலையிலே தமிழரசுக்
கழகம் புதிய தமிழகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
விடுதலைப் போரில் - திலகர் சகாப்தத்தில் தாய் நாட்டுப் பற்றோடு
பிணைந்து வளர்ந்தது தாய் மொழிப்பற்று. அடுத்துத் தோன்றிய காந்தி
சகாப்தத்திலே ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பணியும்
தொடங்கியது. காந்தி சகாப்தம் முடிந்து சுதந்திர சகாப்தம் தோன்றிய பின்னர்,
தமிழ்நாடு காங்கிரஸ் - தமிழ் மொழியைப் பொறுத்த வரையில் தன்
பாரம்பரியத்திற்கேற்பச் செயல்படத் தவறியதால், அந்தப் பொறுப்பைத்
தமிழரசுக் கழகம் ஏற்றுக்கொண்டது. ஆம்; தேசியப் பரம்பரையின்
வாரிசாகத்தான்!