விடுதலைப் போராட்டத்தின் நடுவே பிரதேச மொழிகளின்
வளர்ச்சிக்காகத் திட்டமிட்டுப் பணியாற்றுவது தேசியவாதிகளால் இயலாததாக
இருந்தது. அடக்குமுறைக் கொடுமைகளால் அவர்கள் அல்லலுற்ற
நேரமல்லவா! ஆனால், சுதந்திரக் கதிரவன் தோன்றிய காலத்திற்குச் சற்று
முன்னும் பின்னும் தமிழ் மொழியின் வளர்ச்சி கருதித் திட்டமிடலாயினர்.
அந்த வகையில் ஏதேனும், ஒரு அரசியல் அமைப்பு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கெனவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு திட்டமிட்டுப்
பணியாற்றத் தொடங்கியதென்றால், அது தமிழரசுக் கழகம்தான்.
1946 ஜனவரி 11ல்-தைத் திங்கள் முதல் நாளில் தமிழர் திருநாள்
கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தனர் தமிழரசுக் கழகத்தார்.
தமிழரெல்லாம் - சாதி, சமய, கட்சி வேற்றுமையின்றி - ஒன்றுபட்டு அந்த
நன்னாளைக் கொண்டாடினர். தமிழ்நாட்டில் மட்டுமன்றி, வெளி மாநிலங்களில்
வாழும் தமிழர்களும் தமிழர் திருநாள் கொண்டாடும் வழக்கம் 1947ல்
தொடங்கியது. அந்த விழாவையொட்டி, புதிய தமிழகத்தைப் படைக்கும்
பிரகடனமொன்றும் அந்த ஆண்டில் தமிழரசுக் கழகத்தால்
வெளியிடப்பெற்றது.
அந்தப் பிரகடனத்தில், திரு.வி.க., கு. காமராசர், டி.டி.கிருஷ்ணமாச்சாரி,
ப.ஜீவானந்தம், 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன், த.செங்கல்வராயன்,
வ.ரா., தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் உட்பட பன்னிருவர் கையொப்பமிட்டனர்.
தமிழர் வாழ்விலே எங்கும் எதிலும் தமிழே முதலிடம் பெற
வேண்டுமானால், தமிழகத்தில் தமிழரசு அமைத்து ஆகவேண்டும்
என்பதனைத் தமிழரெலாம் உணர்ந்தனர்; உணரும்படிச் செய்தது
தமிழரசுக் கழகம்.
தமிழினத்தில் தோன்றிய விடுதலை வீர்களின் வரலாறுகளைத் தமிழ்
மக்களுக்கு உணர்த்துவதற்கான தொண்டும் தொடங்கப்பெற்றது. அந்த
வகையிலே கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ஆகியோரின் வரலாற்று
நூல்கள் வெளியிடப்பெற்றன.
தமிழர் வாழ்வாங்கு வாழ்ந்த காலத்தின் - தமிழர் வாழ்விலே
தமிழே முதலிடம் பெற்றிருந்த சகாப்தத்தின் இலக்கியங்களைப்
பட்டி தொட்டிகளில் எல்லாம் பரவச் செய்யும் பணியும் தொடங்கப்
பெற்றறது. அதற்கு முன்னோடியாக, சிலப்பதிகாரத்தின் பெயரால்