பட்டினங்களில் மட்டுமன்றி, பட்டிதொட்டிகளில் எல்லாம் மாநாடுகள் நடத்தத்
திட்டமிடப்பட்டது. தமிழினத்தின் ஒற்றுமையை, உரிமை உணர்வை
வலியுறுத்தும் வகையில் சேரமுனி தந்த சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு
விமர்சனம் செய்யும் நூல்களும் வெளிவரலாயின. தமிழகத்தின் வடக்கு-தெற்கு எல்லைகளைத் தமிழினத்தின் வரலாற்று
வழியே வரையறுக்கும் பணியும் தொடங்கப்பெற்றது. பறிபோன பகுதிகளை
மீட்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. தமிழினத்தில் தோன்றிய
விடுதலை வீரர்களுக்கு - விழுமிய புலவர்களுக்கு - தமிழ் வளர்த்த
புரவலர்களுக்குத் தனித்தனியே நினைவுநாள் கொண்டாடும் சீரிய பணியையும்
தொடங்கி வைத்தது தமிழரசுக் கழகம்.
ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டிலே தமிழ் இலக்கிய மாநாடு நடத்தும்
புதுமையையும் புரட்சியையும் தமிழரசுக் கழகத் தேசியவாதிகளே
முதன்முதலாகத் தொடங்கி வைத்தனர்.
அதே கால கட்டத்தில், அப்போதுதான் ஆட்சி பீடத்தில் ஏறியிருந்த
தேசியவாதிகளாலும் பிரதேச மொழிகளின் வளர்ச்சிக்கான திட்டங்கள்
தீட்டப்பெற்றன. அப்போதைய சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக
இருந்த திரு.டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார், "எங்கும் எதிலும் தமிழ்"
என்ற கொள்கையின் அடிப்படையிலே தமிழ் மொழியை வளர்க்கத்
திட்டமிட்டார். அதற்கெனத் தனி அமைப்பொன்றையும் நிறுவினார். அதன்
பெயர், "தமிழ் வளர்ச்சிக் கழகம்" என்பதாகும்.
அவினாசியாரின் அரும்பணி!
சிறந்த காந்தியவாதியான திரு. அவினாசிலிங்கம் செட்டியார், கல்வியின்
எல்லாக் கட்டங்களிலும் தாய் மொழியையே பயிற்று மொழியாக்க முனைந்தார்.
1938ல்-ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது - உயர்நிலைப் பள்ளிகளில்
அனைத்துப் பாடங்களுக்கும் தமிழே பயிற்று மொழியாக்கப் பட்டதனை
முன்பே அறிந்தோம். ஆனால், 1939 ஆம் ஆண்டின் இறுதியிலே
காங்கிரஸ்காரர்கள் ஆட்சிப் பொறுப்பைத் துறந்து வெளியேறிய பின்னர்,
சுமார் ஆறாண்டு காலம் ஆங்கிலேயர் மூவர் கொண்ட "ஆலோசகர் ஆட்சி"
நடைபெற்றது. அந்தக் காலத்தில் திரும்பவும் ஆங்கிலமே உயர்நிலைப்
பள்ளிகளில் பயிற்றுமொழியாக்கப்பெற்றது. 1946ல் மீண்டும் காங்கிரஸ்