பொறுப்பு முழுவதையும் தமிழ் வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்புவித்தார். தமிழ் மொழிக்குப் புது வாழ்வு தேடும் பணியின் ஒரு பகுதியாக 1948ல்
'நூலகச் சட்டம்' ஒன்றும் அப்போதைய சென்னை மாநில சட்ட மன்றத்தில்
நிறைவேற்றப்பட்டதனை முன்பே அறிந்தோம்.
ஆண்டுதோறும் தமிழகத்திலும் தமிழர் வாழும் பிறவிடங்களிலும் தமிழ்
விழாக் கொண்டாடவும், அந்த விழாவிலே சிறந்த தமிழ் நூல்களுக்குப்
பரிசளிக்கவும் தமிழ் வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டது.
இப்படி, நாடு சுதந்திரம் பெறுவதற்கு சற்று முன்னும் பெற்ற பின்னர்
ஒன்றிரண்டு ஆண்டுகளிலும் தமிழ் மொழிக்குப் புதுவாழ்வளிக்கும் பணியில்
திட்டமிட்டுச் செயல்புரிந்தனர் தேசியவாதிகள்.
சுதந்திர இந்தியாவிலே பிரதேச மொழிகளின் - குறிப்பாக, நம் தமிழ்
மொழியின் வளர்ச்சிக்காக தேசியவாதிகள் ஆற்றியுள்ள பணிகள் மாபெரும்
நூலாக அமையும் அளவுக்கு விரிவானவையாகும். அதனை இங்கே
விரித்துரைத்தல் 'விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு' என்னும்
தலைப்புக்குப் பொருந்தாததாகிவிடும். ஆனால், அப்படி ஒரு பெரு நூல்
தோன்றுவதற்கு இந்த நூல் முதல் நூலாக அமையுமென்று நம்பலாம்.
நாடு விடுதலை பெற்றபின் மொழிவழிப்பட்ட பிரச்சினைகளிலே
தேசியவாதிகளிடையில் கருத்து வேற்றுமை தோன்றியது. அதனாற்றான்,
தமிழ் மொழியின் - தமிழ் இனத்தின் தனி நலன்களைக் காக்கவும்
வளர்க்கவும் காங்கிரசுக்கு வெளியே ஒரு தனி அமைப்புத் தேவைப்பட்டு,
அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய தேசியாவதிகளால் தமிழரசுக் கழகம்
தோற்றுவிக்கப் பெற்றது.
தமிழ் வாழ்க!
நாடு விடுதலை பெற்ற பின்னுள்ள இருபத்து மூன்றாண்டு காலத்திலே
ஒரு புதிய தலைமுறை தோன்றிவிட்டது. "தேசிய வாதிகள்" என்றழைக்கப்படும்
பழைய பாரம்பரியம் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. அந்தப்
பாரம்பரியத்தைச் சார்ந்த எழுத்தாளர்களில் - இலக்கியவாதிகளில் ஒரு சிலரே
முதுமை எய்திய நிலையில் இன்று நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.
தேசியப் பாரம்பரியத்தினர் தமிழ் மொழிக்குச் செய்துள்ள சீரிய பணிகளுக்காக