பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 49

பாண்டி அமைச்சன் குடிலன் என்பான், இருநாடுகளின் எல்லைப் பகுதியாகிய
'நாஞ்சில்நாடு'  பற்றிய பிரச்னையையே காரணமாக்குகின்றான்.

     தமக்குப் பிற்காலத்தில் தோன்றிய தமிழகத்தெற்கெல்லைக் கிளர்ச்சிக்கு,
தாம்    இயற்றிய   'மனோன்மணீயம்'    நாடகத்திலேயே  அடியெடுத்துக்
கொடுத்தார் சுந்தரனார்.

     அமைச்சன் குடிலன், தன் மன்னனான பாண்டியன் ஜீவகனை நோக்கி,

          வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச்
          செந்தமிழ் வழங்கும் தேயமொன் றுளது. அதன்
          அந்தமில் பெருவளம் அறியார் யாரே?
          அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே
          உரித்தென அங்குள பாடையே உரைக்கும்.
          சின்னா ளாகச் சேரன் ஆண் டிடினும்
          இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை
          கொடுத்ததும் இல்லை, நாம் விடுத்ததுமில்லை

     என்று கூறியதாகச் சொல்லி, நாஞ்சில் நாட்டு உரிமை பற்றி  வழக்குத்
தொடுக்க    வேண்டியதன்  அவசியத்தைத்   தாய்த்   தமிழ்நாட்டாருக்கு
மறைமுகமாகக் கூறினார் சுந்தரனார்.

     பாண்டி அமைச்சன் குடிலனுடய மகன் பலதேவன் என்பான்,

          வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த
          நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே?
          எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு பரவும்
          பாடையும் விரவுமா சாரமும்
          நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா-

     என்று   சேரமன்னன்  புருடோத்தமனிடத்து  வழக்குரைக்குமிடத்தும்
நாஞ்சில்  நாட்டு   உரிமைக்    கிளர்ச்சிக்குத் தூபமிடுகின்றார் சுந்தரனார்.
 

     சுந்தரனார்,   தமது    'மனோன்மணீயம்'   நாடகத்தின்   வாயிலாக
வெளிப்படுத்திய தமிழ்மொழிப் பற்றும் அப்போது உருவாகிக் கொண்டிருந்த
தேசிய  எழுச்சிக்குப்  பெரிதும்  உதவியாக இருந்ததெனலாம்.