ரோடெல்லாம் பழகி, மதத்தால் கிறித்துவரான அவர் இனத்தால்
தமிழராகவே மாறிவிட்டார். மாணிக்கவாசகரியற்றிய மனமுருக்கும் திருவாசகத்திடம் போப் ஐயர்
வைத்திருந்த பக்திக்குச் சான்றாக ஒரு செய்தி உண்டு. அந்தச் செய்தி,
அண்ணாமலைப் பல்கலைக்கழக சார்பில் வெளியிடப்பட்டுள்ள 'திருவாசகம்-
முதற்பகுதி' நூலின் முன்னுரையில் பின்வருமாறு காணப்படுகிறது:
"அறிஞர் ஜி.யூ.போப்பையர் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்,
மயிலைமாமுனிவர் என்று உலகம் போற்றியவரும், சென்னை உயர்
நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவருமாகிய அறிஞர்
சர்.எஸ்.சுப்பிரமணிய ஐயரவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தின் மேற்பகுதி நீரால் நனைந்து எழுத்துக்கள் கலைந்திருந்தன.
கீழ்ப்பகுதியில் "மேற்பகுதியில்" எழுத்துக்கள் நீர்த்துளி பட்டுக்
கலைந்திருப்பதை நான் அறிவேன்; வேறு கடிதம் எழுதலாம் என்று
எண்ணினேன். ஆனால், அந்நீர்த்துளிகள் கடிதத்தில் பட்ட நிகழ்ச்சி
இக்கடிதத்தைக் கிழித்துவிட்டு வேறு ஒன்று எழுத எனக்கு இடந்தரவில்லை.
சில காலமாக, நான் எந்தக் கடிதம் எழுதினாலும், திருவாசகத்தில் ஒரு
தொடரைத் தலைப்பில் எழுதிய பின்புதான் மற்றவற்றை எழுதுவேன்.இன்று
அவ்வாறு எழுதுதிவிட்டுக் கடிதத்தை மேல் தொடர்ந்து எழுதும்போது என்
உள்ளத்திலமர்ந்திருந்த திருவாசகப் பொன்மொழி என்னை அறியாமலே
கண்ணீர்ப் பெருகச்செய்திருக்கிறது. பெருகிய கண்ணீர் கடிதத்தில் விழுந்து
நனைந்திருப்பதைக் கவனியாமல் மையுரிஞ்சு தாளால் கடிதத்தை ஒற்றி
எடுத்தபோது, கண்ணீர்த்துளிகள் பட்டுக்கையெழுத்துக் கலைந்திருப்பதைப்
பார்த்தேன். பார்த்ததும் இக்கடிதத்தைப் புறக்கணிக்க மனம் வரவில்லை.
திருவாசகத்தால் எழுந்த கண்ணீரும் போற்றத்தக்கது என்ற எண்ணத்தால்
இக்கடிதத்தை அப்படியே அனுப்பியுள்ளேன் மன்னிக்க" என
எழுதியிருந்தார்.
ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல்
தமிழ் மொழியின் வளர்ச்சி கருதி செயற்கரிய செயல் புரிந்த
மற்றொரு பாதிரிப் பெருமகனார் ரைட் ரெவரண்டு ராபர்ட்
கால்டுவெல் ஆவார். இவர், கிறித்தவசமயப் பணியின் பொருட்டு,
1838 ல் தமிழ்நாட்டிற்கு வந்தார். இப்பெரியார் திராவிட
மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அரிய நூலை இயற்றி , நம் தாய்
மொழியான தமிழ், உயர் ஆரியத்துக்கு நிகர் என்பதனை உலகறிய