பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 55

பிரதேசமொழிகளில்   நடத்துவதா?-   என்ற   பிரச்னை   பத்தொன்பதாம்
நூற்றாண்டில்    எழுந்தது.    மிஷனரிகளில்    மிகப்    பெரும்பாலோர்
ஆங்கிலத்தின்மூலம்  நடத்துவதையே  விரும்பினர் என்றாலும், அவர்களில்
மிகவும்  புத்திசாலிகளானோர்,  அது  அனுபவ  சாத்தியமற்றது என்பதனை
உணர்ந்திருந்தனர்.  அதனால்,  மிஷனரிகளில்  ஜி.யூ.போப் போன்றவர்கள்,
பிரதேச    மொழிகளின்   வாயிலாக  கிறித்துவ  மதப்பிரசாரம் செய்வதே
பயனுடையதாக  இருக்குமென  வலியுறுத்தினர். இந்தக்  கருத்து  கிறித்துவ
மிஷனரிகளில்   பெரும்பாலோரால்   ஏற்கப்பட்டதால், சமயத்  தொண்டில்
ஈடுபட்டிருந்த     பாதிரிமார்கள்,    தாங்கள்   எந்தெந்தப்  பிரதேசத்தில்
வாழ்ந்தார்களோ, அந்தந்தப் பிரதேசத்தின் மொழியைப்பயில நிர்ப்பந்திக்கப்
பட்டனர்.   அதன்படி,   தமிழகத்திற்கு   வாழையடி   வாழையென  வந்த
வெள்ளைப்    பாதிரிமார்கள்     தமிழ்     கற்க  நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அதன்    விளைவாகவே,   வீரமாமுனி,  ராபர்ட் கால்டுவெல், ஜி.யூ.போப்
போன்றோர் தமிழ் பயின்றனர்.

      அதே காலத்தில் கோல்புரூக்,பாப்,கிரிம்,மாக்ஸ்முல்லர்,புரூக்மன்,விட்னி
ஆகிய  மொழியியல் வல்லுநர்களான   வெள்ளையர்கள், சம்ஸ்கிருத மொழி
பற்றிய  ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அம்மொழியின் அருமை பெருமைகளை
யெல்லாம் அறிந்து, அறியாத மக்களுக்கும் அறிவிப்பாராயினர்.

      தமிழகம் வந்த பாதிரிமார்களிலே   சிலர்  நடத்திய மொழி - நாகரிக
ஆராய்ச்சி காரணமாக, தமிழுக்கும் சம்ஸ்கிருதத்திற்கும் இயற்கையாகவேயுள்ள
இடைவெளி  மேலும்  அதிகப்பட்டது எனலாம். இதனால், தமிழ், தனிமொழி,
தமிழர்   தனிஇனத்தார்;   தனிநாகரிகத்தார்  என்ற எண்ணங்களும்  வளரத்
தொடங்கின.

      இராமலிங்கர், தயானந்தர், ராசாராம் மோகன்ராய் ஆகியோர்  இந்திய
மக்களிடையே      ஒருமைப்பாட்டுணர்ச்சியை     வளர்க்கப்   பாடுபட்டுக்
கொண்டிருந்த  அதே  நேரத்தில், கிறித்துவப்  பாதிரிமார் சிலரால்  பிரதேச
உணர்ச்சிகள் வளர்க்கப்பட்டு  வந்தன. ஆயினும்,  பிரதேச  உணர்ச்சியினும்
தேசிய எழுச்சியே மக்களிடம் மிகுதியாக வளர்ந்ததெனலாம்.