தேசியப் பாசறை! பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரதத்தில் தோன்றிய இராம்மோகனார், இராமலிங்கர், தயானந்தர், இராமகிருஷ்ணர் ஆகியோரால் தோற்றுவிக்கப் பெற்ற கலாச்சார ஒருமைப்பாட்டு இயக்கங்களைக் கண்டு கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி கவலைப்பட்டிருக்க வேண்டும். அந்த இயக்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரானவையல்லவென்றாலும், அடிமைப்பட்ட மக்கள் ஏதேனும் ஒருவகையில் ஒருமைப்பாடு பெறுவதே அன்னிய ஆதிக்கத்திற்கு அச்சந்தருவது தானே! தென்தமிழ்நாட்டில் பாளையக்காரர்கள் நடத்திய உரிமைப் போரோ- வடக்கே சிப்பாய்கள் நடத்திய விடுதலைப் புரட்சியோ அப்போதைக்குத் தோல்வியுற்றனவென்றால், அதற்குக் காரணம் என்ன? அவை இந்தியா முழுவதிலும் பரவலாக நடைபெறவில்லை என்பதுதான். நாடு தழுவிய அளவில் விடுதலைப்போர் நடைபெறுவதற்கேற்ப இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் ஒருமைப்பாட்டுணர்ச்சி அந்நாளில் வலுப்பெற்றிருக்கவில்லை. ஆம், மக்கள் ஸ்தாபனரீதியில் ஒன்றுபட்டிருக்கவில்லை. அதனால், குமரி முதல் இமயம் வரை கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருந்த சின்னஞ்சிறு கூட்டத்தாரான - நவீன போர்க்கருவிகளைப் பெற்றிருந்தவர்களான - வெள்ளையர்கள் வெற்றி பெற்றனர். இந்த உண்மையை ஆங்கிலேயர் அறிந்திருந்ததனாலேயே இந்தியாவில் புதிதாகத் தோன்றி நாளொரு மேனியாக வளர்ந்து வந்த கலாசார ஒருமைப்பாட்டியக்கங்களைக் கண்டு அஞ்சுவாராயினர். அந்த இயக்கங்கள், கிழக்கிந்தியக் கம்பெனியார் கொண்டு வந்த ஐரோப்பிய நவநாகரிகத்திற்கும் ஆங்கில மொழிக்கும் அடிமைப்படாதவர்களால் நடத்தப்பட்டன. இது, ஆங்கிலேயர்களின் கலக்கத்திற்கு மற்றொரு காரணமாகும். பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்த இராம்மோகனரைத் தவிர, இராமலிங்கர், தயானந்தர், இராமகிருஷ்ணர் ஆகிய மூவரும் ஆங்கிலமறியாதவர்கள்; ஐரோப்பிய நாகரிகத்தைத் தங்கள் நெஞ்சாலும் தீண்டாதவர்கள்; பாரதத்தின் பழம்பெரும் நாகரிகத்திலே பற்றுடையவர்கள். இதற்கெல்லாம் மேலாக, அவர்கள் முற்றுந்துறந்த முனிவர்களாதலால், யாருக்கும் அஞ்சாதவர்கள். |