ஆங்கிலத்தில் பெரும்புலமையும் பற்றும் உடைய காரணத்தால் பிரம்ம
சமாஜத்தலைவர் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்கு
நண்பராகி்விட்டார். சமரசசுத்த சன்மார்க்க சங்கத்தலைவரும் ஆரியசமாஜத்
தலைவரும் பிரிட்டிஷ் ஆட்சியோடு எந்தவகையிலும் எந்தஅளவிலும்
தொடர்பு கொள்ளாதவர்களாக இருந்தனர்.
தெற்கே இராமலிங்கர் தொடங்கி வைத்த சமரச சுத்த சன்மார்க்க
இயக்கம் மதங்கடந்த மக்கள் இயக்கமாயினும், அதனால் பாரதத்தின் சொந்த
மதமான இந்து மதம் புதிய சக்தியைப் பெறக்கூடுமென்று ஆங்கிலேயர்
கருதினர். அடிகளார் மறைந்தது பற்றி விசாரணை நடத்திய அந்நாளைய
தென்னாற்காடு கலெக்டர், "இராமலிங்க சுவாமிகளது வரலாறு இன்றும் மத
எழுச்சி திசை திரும்பக்கூடும் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகத்
திகழ்கின்றது"1 என்று தாம் எழுதிய குறிப்பில் கூறியுள்ளார்.
இராம்மோகனர்,இராமலிங்கர், தயானந்தர், இராமகிருஷ்ணர்ஆகியோர்
பிரதேச மொழிகளிலே படைத்த புதிய இலக்கியங்களால் தேசிய
ஒருமைப்பாடு உருவாகி வந்ததென்பதில் ஐயமில்லை.
தெற்கே பாளயக்காரர்களும் வடக்கேசிப்பாய்களும் நடத்திய
பிரிட்டிஷ் ஆதிக்க எதிர்ப்புப்புரட்சிகளின் போது அப்புரட்சிக்காரர்களுக்கு
ஆதர்சசக்தியாகத் திகழ்ந்தது மத உணர்ச்சிதான். புரோகிதர்களும்
மௌல்விகளும் கூட போர் வீரர்களாக விளங்கிய புலமையை
ஆங்கிலேயர்கள் கண்டனர். வீரபாண்டியக் கட்டபொம்மன், தான் களம்
புகுந்த ஒவ்வொரு சமயத்திலும், ஜக்கம்ம தேவியையும் செந்தில்
முருகனையும் வழிபட்ட பின்னரே கையில்வாளேந்தினான். வடக்கே நடந்த
சிப்பாய்ப் புரட்சியிலும் பவானி தேவியும் காளிதேவியுமே விடுதலை
வீரர்களுக்கு ஆதர்சமளிக்கும் சக்திகளாயினர்.
தலைமையை மாற்றினர்!
இப்படி, மதவழிப்பட்ட கலாசார உணர்வால் உந்தப்பட்டு 1797 முதல்
1857 வரை-60 ஆண்டு காலம்-முதலில் தெற்கிலும் பின்னர் வடக்கிலுமாக
நடந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களில் பயங்கர அனுபவம்
பெற்ற ஆங்கிலேயர், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில்
தோன்றிய கலாச்சார ஒருமைப்பாட்டியக்கங்களைக் கண்டு கலங்கியதில்
வியப்பில்லையல்லவா!
1.தெ.ஆ.மாவட்டமானுவல் - 1878:பக்.317.