சூழ்ச்சியில் மிக்க வெள்ளையர், பாரதப் பொதுமக்களை, தாய்மொழிப்
பண்டிதர்கள்-தவயோகிகள் தலைமையிலிருந்து விடுவித்து, ஆங்கிலம் படித்து
ஐரோப்பிய நாகரிகத்திற்கு அடிமைப்பட்டிருந்த பல்கலைக்கழகப் பட்டதாரிகள்
தலைமையின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டனர். இந்த முயற்சி உருவானது
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒன்பதாம் பத்தாண்டிலாகும்.
லார்டு மெக்காலே உருவாக்கிய-ஆங்கிலத்தைப் போதனா மொழியாகக்
கொண்ட-கல்வித்திட்டம் 1836ஆம் ஆண்டில் முதன் முதலாக வங்காளத்தில்
நடைமுறைக்கு வந்த. லார்டு மெக்காலே இந்திய நாகரிகத்தை விரும்பாதவர்.
அதனைக் கேலி செய்தும் நூலெழுதியவர். இந்தியர்களை அவர்களுடைய
பாரம்பரியமான நாகரிகத்திலிருந்து விடுவித்து, ஐரோப்பிய நாகரிகத்துக்கு
அடிமைப்படுத்தும் உள்நோக்குடனேயே மெக்காலே தனது கல்வித்
திட்டத்தைத் தயாரித்தார்.
தனது கல்வித் திட்டத்தை வங்காளத்தில் ஆரம்பித்து வைத்து அவர்
பேசிய போது,
"ஆளுவோரான நமக்கும் ஆளப்படுவோரான கோடிக்கணக்கான
மக்களுக்கும் இடையே விபாஷிகளாக இருக்கக் கூடிய ஒரு புதியசாதியை
உண்டாக்குவதற்கு நாம் நம்மால் இயன்றதைச் செய்தே ஆகவேண்டும்."
"நமது கல்வித் திட்டமானது வழுவின்றிப் பின்பற்றப்படும் பட்சத்தில்
இன்னும் முப்பதாண்டுக் காலத்துக்குள் வங்காளத்தில் ஓர் இந்துவோ
அல்லது முஸ்லிமோ இருக்கமாட்டார் என்பது என் உறுதியான நம்பிக்கை."1
என்றார். ஆம்; அவர் அன்று "இந்திய நாகரிகம்" என்பதனை, இந்து
அல்லது முஸ்லிம் நாகரிகமாகத்தான் கருதினார்.
புதிய சாதி பிறந்தது!
மெக்காலேயின் கனவு முழு அளவு பலித்ததென்று சொல்வதற்கில்லை
யென்றாலும், ஓரளவு பலித்தது. அதாவது, மெக்காலே கல்வித்திட்டம் நடை
முறைக்கு வந்த பின்னுள்ள அரை நூற்றாண்டு காலத்தில் ஆங்கிலத்தின்
வாயிலாகக் கல்வி கற்ற புதிய சாதி ஒன்று தோன்றிவிட்டது. அந்தச்
சாதியினரில் மிகப்பெரும்பாலோர் தாய்மொழிப் பற்றும் தாய் நாட்டுப்
பற்றும் அற்றவர்களாயினர்.
1.'1857' என்ற நூலில்