பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 59

     இந்தப்  புதிய  சாதியின்  முதல்  தலைமுறையினர்  தங்கள் காலத்தில்
நடைபெற்ற  சிப்பாய்ப்புரட்சிக்கு  ஆதரவு   காட்டவில்லை. அதற்கு மாறாக,
அந்தப்  புரட்சியை  நசுக்குவதற்குக்  கிழக்கிந்தியக்  கம்பெனி  ஆட்சிக்குத்
துணைபுரிவோராகவும் இருந்தனர்.

     "ஆங்கிலம் படித்த  சுதேசிகளும்  கிறித்துவ  மதத்திற்கு  மாற்றப்பட்ட
வர்களும் அநேகமாக  நமக்கு   விசுவாசமாகத்தான்  நடந்து கொண்டார்கள்
என்று   பிரிட்டிஷார்   எழுதியிருக்கிறார்கள்"  என்ற  தகவல்  தந்துள்ளார்
அசோக் -  மேத்தா.  இந்த  அனுபவத்தாலும் ஆங்கிலம்   பயின்ற   புதிய
சாதியிடம் மிகுந்த நம்பிக்கை வைத்தனர் ஆங்கிலேயர்.

     ஆங்கிலம்   படித்த    புதியசாதியினர்,   தாங்கள்  கற்ற  கல்வியின்
விளைவாக, இந்திய   சமுதாயத்திலே  உயர்  சாதியினராக இருக்க முடிந்தது
என்றாலும்,   ஆங்கிலேயர்   ஆட்சியிலே   உயர்தர  உத்தியோகங்களைப்
பெறமுடியவில்லை.  மாவட்ட   கலெக்டர், மாவட்ட  நீதிபதி, உயர்நீதிமன்ற
நீதிபதி,   அரசாங்க    இலாகாக்   காரியதரிசி   போன்ற   உயர்பதவிகள்
ஆங்கிலேயருக்கே       உரிமையாக்கப்பட்டிருந்தன.  தப்பித்       தவறி
இங்கொருவருக்கும்  அங்கொருவருக்குமாக  இந்தியருக்கு  அப்பதவிகளிலே
ஒன்றிரண்டு வழங்கப் பெற்றாலும்,  ஊதியத்திலே  வேற்றுமை இருந்தது.ஒரே
பதவிக்கு  வருவோரில், வெள்ளையரானால்  அதிக ஊதியம்; இந்தியரானால்
குறைந்த ஊதியம். அந்தஸ்திலேயும் இந்த ஏற்றத்தாழ்வு இருந்தது. அரசாங்க
உயர்தரப்  பதவிகளைப்   பெறுவதற்குத்  தேவைப்பட்ட  ஐ.சி.எஸ்  கல்வி
இந்தியாவில்  தரப்படவில்லை.  அதனைப்  பெற  இங்கிலாந்துக்குச் செல்ல
வேண்டியிருந்தது.    இந்தக்     குறைகளை   ஓரளவேனும்   குறைத்தால்,
படித்தவர்களையும் அவர்களுக்கு   வழிவழித்   தோன்றும்  சந்ததிகளையும்
பிரிட்டிஷ் விசுவாசிகளாகச்  செய்துவிட முடியுமென்றும், அப்படிச் செய்தால்
மட்டுமே  இந்தியாவில்  பிரிட்டிஷ்  ஆதிக்கம்  நிலைபெற முடியுமென்றும்
ஆங்கிலேயர் கருதினர்.  இந்தக்  கருத்து  நிறைவேறத்தானே ஹ்யூம் என்ற
ஆங்கிலேயர்ஆங்கிலம் படித்த புதிய சாதியினரை ஒரே ஸ்தாபனத்தின் கீழ்
கொண்டுவர   திட்டமிட்டார்!   அவரது   முயற்சியின்  பேரில் ஆங்கிலம்
படித்தவர்களுக்கு  -  பிரிட்டிஷ்   விசுவாசிகளுக்கு - வேலை தேடித்தரும்
அமைப்பாக 1885 டிசம்பர் 28ல் பம்பாய் நகரில் இந்திய தேசிய காங்கிரஸ்
மகாசபை
தோன்றியது.