பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 61



வாழ்த்து   போன்று,   பிரிட்டிஷ்  அரசருக்கு  வாழ்த்துப்பாடி, வழிபாடு
நடத்தப்பட்டது. எந்த  மாநிலத்தில் காங்கிரஸ்  மகாசபை  கூடுகின்றதோ,
அந்த  மாநிலத்தின்  கவர்னரான  வெள்ளையர்,  மகாசபைக்குச்  செய்தி
அனுப்புவது   வழக்கம்.  அந்தச்  செய்தியைப் படிக்குங்கால், மகாசபைப்
பிரதிநிதிகள்   அனைவரும்   எழுந்து  நின்று  பயபக்தியுடன் மரியாதை
காட்டுவது  மரபு. சில  மகாசபைகளின் போது, கவர்னரின்  ஆசிச்செய்தி
தாமதித்துக் கிடத்ததால், அந்தச் செய்தியை எதிர்பார்த்து   மகாசபையின்
நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டனவாம்.

திரை விலகுகிறது

     1885 முதல்  1905 வரையுள்ள  இருபதாண்டு  காலத்தில்,  காங்கிரஸ்
மகாசபை,    படித்தவர்களுக்கு   உயர்தர   உத்தியோகங்கள்   வழங்கக்
கோரித்தீர்மானங்கள்   நிறைவேற்றி,   அவற்றை  ஆளுஞ்  சாதியினரான
ஆங்கிலேயருக்கு அனுப்பி வைப்பதையே தன் கடமையாகக் கருதி வந்தது.
அதுதானே  காங்கிரசைத்  தோற்றுவித்த   ஆங்கிலேயரின்   குறிக்கோள்.
இதுபற்றி திரு.பிஸேஷ் வர் பிரசாத் என்பவர் கூறியிருப்பதாவது:

     "இந்தியாவில்    தோன்றிய     கலாச்சார    வழிப்பட்ட   தேசிய
ஒருமைப்பாட்டியக்கத்தின்   வளர்ச்சி    கண்டு  அஞ்சிய  ஹ்யூம் என்ற
ஓய்வுபெற்ற  அதிகாரியான  ஆங்கிலேயர், காங்கிரஸ் மகாசபையை நிறுவ
முனைந்தார்.

     "இதன்    நோக்கம்    பிரிட்டிஷ்     சாம்ராஜ்யத்திற்கு   ஆபத்து
ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்வதுதான். அப்போது கவர்னர் ஜெனரலாக
இருந்த    டப்ரின்    என்பவர்,     காங்கிரசைத்   துவக்க  ஹ்யூமுக்கு
ஆலோசனை கூறினாராம்."1

     காங்கிரஸ்     மகாசபை     துவங்கிய     பின்னுள்ள    ஆரம்ப
ஆண்டுகளிலே,   மகாசபை    கூடும்    ஒவ்வொரு  சமயத்திலும்  சமூக
சீர்திருத்த  மாநாடும்  நடத்தப்பெற்றது. பின்னர்  அது   கைவிடப்பெற்றது.
ஆம்;    அன்றைய     காங்கிரஸ் காரர்களில்   அவ்வளவு      பேரும்
ஆங்கிலமொழி        பயின்று,         அன்னிய       நாகரிகத்திற்கு
அடிமைப்பட்டவர்கள்.    அவர்களில்    பெரும்பாலோர்   தாய் மொழிப்
பற்றற்றவர்கள். அப்படிப்பட்டவர்கள்   சமூகத்திற்குச்   சேவை  புரிவதோ,
சமூகத்தைச் சீர்திருத்துவதோ சாத்தியமில்லையல்லவா!


1. 'இந்திய தேசிய இயக்கத்தில் திருப்பங்கள்'; பக்.39