படித்தவர்கள் படைத்த சங்கங்கள் காங்கிரஸ் மகாசபை துவக்கப்பட்ட பின்னர், பாரதம் முழுவதிலுமுள்ள பட்டதாரிகளுக்கு அதனிடத்து ஒரு கவர்ச்சி ஏற்பட்டது. அதனால், ஏராளமான பட்டதாரிகள் காங்கிரசில் சேர முன்வந்தனர். காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்பே, படித்த பட்டதாரிகளால், நாட்டின் பல்வேறு நகரங்களில் பல நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு, இயங்கி வந்தன. வங்காளத்தில் 1851ல் 'பிரிட்டிஷ்- இந்திய சங்கம்' தோன்றியது; அதே சமயத்தில் தாதாபாய் நௌரோஜி என்ற கனவான் பம்பாயில் 'பம்பாய் சங்கம்' என்ற ஒன்றை நிறுவினர். மகாராஷ்டிரத்தில் 'சர்வஜன சபா' ஏற்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் 'காங்கிரசின் தந்தை' யென்று போற்றப் பெற்ற சுரேந்திரநாத்பானர்ஜி என்பார். 1876ம் ஆண்டில் வங்காளத்தில் 'இந்தியர் சங்கம்' கண்டார். சென்னை மாநகரில் 1881ல் 'மகாஜனசபை' நிறுவப்பட்டது. இத்துணை நிறுவனங்களும் 1885ல் தோன்றிய காங்கிரஸ் மகாசபையுடன் ஒத்துழைக்க முன் வந்தன. ஆனால், உண்மையான சமூக சீர்திருத்த நோக்கத்துடன் தேசிய கலாச்சார ஒருமைப்பாட்டைக்கட்டி வளர்க்க தாய்மொழிப் பற்றுடைய ஞானியர்களின் தலைமையின்கீழ் இயங்கி வந்த ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், சமரசசுத்த சன்மார்க்க இயக்கம், இராமகிருஷ்ணரின் ஆன்மீக இயக்கம் ஆகியவற்றிற்கும் தாய்மொழிப் பற்றற்ற பிரிட்டிஷ் விசுவாசிகளால் துவக்கப் பெற்ற காங்கிரஸ் மகாசபைக்கும் ஸ்தாபன ரீதியில் தொடர்பு ஏற்பட்டதாகச் செய்தி இல்லை. எப்படி ஏற்பட முடியும்? பரங்கிமொழி பயின்ற பட்டதாரிகளான இந்தியர்களைக் கொண்டு ஹ்யூம் என்பார் காங்கிரசைத் தோற்றுவித்த போது, நாட்டில் ஆங்கிலப் பேரரசின் அடக்குமுறைக் கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருந்தன. வைசிராய் பெருமகனார், இந்திய மொழிப் பத்திரிகைகளுக்கு மட்டும் வாய்ப்பூட்டுச் சட்டம்போட்டு, தேசபக்தியுடைய இந்தியர் குரல்களை ஒடுக்கினார். பிரிட்டிஷ் பேரரசின் கூட்டாளிகளாகிவிட்ட காரணத்தால் நிலச்சுவான்தார்களும் வணிகர்களும் தங்கள் விருப்பம் போல் மக்களைச் சுரண்டினர். உள்நாட்டு - வெளிநாட்டுச் சுரண்டல்களால் இந்தியாவின் பல பகுதிகளிலே பயங்கரமான பஞ்சம் தாண்டவமாடியது. இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொள்ள இயலாமல் பல்வேறிடங்களில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்தனர். |