தேசிய காங்கிரஸ் மகாசபை தோன்றிய பின்புள்ள இருபதாண்டு காலத்தில் - அதாவது, 1885முதல் 1905வரை,அதனால், விடுதலைக்காகப் புரட்சியோ, கிளர்ச்சியோ நடத்தப் பெறவில்லை. இந்தியர்களிலே ஆங்கிலமொழியின் வாயிலாக உயர்தரக்கல்வி கற்றுப் பட்டங்கள் பெற்றவர்களுக்கு உத்தியோகம் தேடித்தரும் முயற்சிகளே நடைபெற்றன. அதற்காக அவர்கள் தங்களுக்குள்ள பிரிட்டிஷ் விசுவாசத்தை வெளிப்படுத்தி, பிரிட்டிஷ் அரசருக்கு வாழ்த்துப்பாடி, இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆசியும் கூறினர் என்பதையும் ஏற்கனவே அறிந்தோம். உரிமை உணர்வோடு சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள மக்களை அணுகி, அவர்களுடைய குறைகளைக் களையும் கோரிக்கை எதையும் எழுப்பாததால், காங்கிரஸ் மகாசபை தோன்றிய பின்னுள்ள முதல் இருபதாண்டு காலத்திலே,பிரதேச மொழிகள் போதிய அளவு வளர்ச்சி பெறவில்லை. பிரதேச மொழிகளை வளர்ப்பது பற்றி காங்கிரஸ் மகாசபை சிந்திக்கவும் இல்லை. சிந்தித்திருந்தாலும், அன்று காங்கிரஸ் மகாசபையின் முன்னணித் தலைவர்களாக விளங்கியவர்களிலே பலர், தத்தம் தாய்மொழியிடத்துப் பற்றற்றவராகி, பரங்கிமொழி ஒன்றிடத்தே பக்தி செலுத்தி வந்தனராதலால், பிரதேச மொழிவளர்ச்சிக்காக அவர்களால் எதுவும் செய்திருக்க முடியாது. இந்திய மொழிகளில் எந்த ஒரு மொழியிலும் ஞானம் பெற்றிராத ஆங்கிலேயர்களான வெட்டர் பெர்ன்,ஆல்பிரட் வெப், சர்.ஹென்றிகாட்டன் ஆகியோர் தலைவர்களாக விளங்கிய நிலையில் தமிழ் உள்ளிட்ட பிரதேச மொழிகள் வளருமா? வளர்க்கத்தான் அவர்களால் முடியுமா? இருண்ட காலம் தாதாபாய் நௌரோஜி போன்ற ஒரு சிலர், தம்தம் சொந்த மொழியிடத்துப் பற்றுவைத்து, அதிலே போதிய புலமையும் பெற்றிருந்தனர் என்றாலும், அவர்களைப் பயன்படுத்தி பிரதேசமொழி வளர்ச்சிக்குத் திட்டமிடத்தக்க சூழ்நிலை அந்நாளில் காங்கிரஸ் மகாசபைக்கு இல்லை. அந்த மகாசபையின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆங்கில மொழி ஒன்றிலேயே நடைபெற்றன. ஆங்கில மொழி அறிந்தவர்கள்தான் மகாசபையில் சேரமுடியும் என்ற நிலையும் இருந்தது. தாய்மொழியில் மட்டுமே புலமை பெற்றவர்கள் காங்கிரஸ் மகாசபைக்குள் பிரவேசிக்க அருகதை யற்றவராகக் கருதப்பட்டனர். அந்நாளில் காங்கிரஸ் மகாசபையால் படைக்கப்பட்ட ‘இலக்கியம்’ |