“எளியபதங்கள், எளியநடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய
சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று
தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர்
தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்
மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன்,
காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும். ‘காரியம் மிகப்பெரியது; எனது திறமை சிறிது. ஆகையால், இதனை
எழுதி வெளியிடுகின்றேன். பிறருக்கு ஆதர்சமாக அன்று;வழிகாட்டியாக!”
“தமிழ் ஜாதிக்குப் புதியவாழ்வு தரவேண்டுமென்று கங்கணங்கட்டி
நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலிலே தூண்டினாளாதலின்,
இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன்.”1
தேசியக்கவி பாரதியாரின் பாஞ்சாலிசபதம் தமிழ்ச்செய்யுள் நடையிலே
ஒரு புதியதிருப்பம் - தமிழ்மொழிக்குப் புத்துயிர் அளித்த புரட்சிகரமான
திருப்பம் எனலாம். தன் முகவுரையிலே, “தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு
தரவேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கிறாள் பராசக்தி” என்கிறார்,
பாரதியார். ஆகா, எவ்வளவு வாய்மையான வாக்கு! இராமலிங்க வள்ளலார்
காலந்தொட்டு, பாரதியார் மறைந்த 1921 ஆம் ஆண்டுவரை- சுமார் ஒரு
நூற்றாண்டு காலத்திலே-பாரதத்தில் தேசிய ஒருமைப்பாட்டெழுச்சி மலர்ந்த
சகாப்தத்தில்-தமிழ்மொழி அடைந்த மறுமலர்ச்சியை ஆழ்ந்து சிந்தித்தால்,
அது பராசக்தியின் அருள் என்று தான் சொல்லத் தோன்றும்.
அந்த நூற்றாண்டிலே, எளிய பதங்களைக் கொண்டு, எளிய
நடையிலே,எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தங்களைக் கொண்டு,
மக்கள் விரும்புகின்ற மெட்டுக்களால் இராமலிங்க வள்ளலாரும்
கோபாலகிருஷ்ண பாரதியாரும் வேதநாயகம் பிள்ளையும் தேசியக்
கவி பாரதியாரும் செய்யுள்களையும் கீர்த்தனங்களையும் இயற்றியி
ல்லையேல், தமிழ்மொழி இதற்குள் செத்துப் போயிருக்குமே!
இப்படி, தமிழ்மொழிக்குப் புது வாழ்வளித்த புலவர்கள் ஒரே
நூற்றாண்டில் தோன்றினரென்றால், அதனைப் பராசக்தியின் அருள்
என்று பாரதியார் கூறுவதில் பிழையில்லையல்லவா! தமிழுக்குப்
1. பாஞ்சாலி சபதம் - முகவுரை