புதுவாழ்வு அளித்தே தீருவதென்று பராசக்தி கங்கணம் கட்டிக்கொண்டு நின்றாளாம், வள்ளலார் தோன்றியது முதல் பாரதியார் வாழ்ந்தது வரையுள்ள காலகட்டத்திலே! மூன்று பற்றுக்கள் பாரதியார், தன் கவிதைத் தொகுப்பு நூல்களிலே முதல் நூலில், தேச பக்தியை மட்டுமே போதித்தார். இரண்டாவது மூன்றாவது தொகுப்பு நூல்களிலே, தேசபக்தியோடு தெய்வபக்தியையும் குழைத்து வழங்கினார் என்று அறிந்தோம். பின்னர் வெளியான பாஞ்சாலி சபதத்தின் முகவுரையிலே, தமிழ்ப்பற்றையும் கலந்து வழங்கக் காண்கின்றோம். ஆம்; தமிழ்நாட்டு மக்கள், தேசத்தையும் தெய்வத்தையும் விட, தமிழையே அதிகமாக நேசிப்பவர்கள் என்ற உண்மையைக் கொஞ்சம் காலந்தாழ்த்தியே உணர்ந்திருக்கிறார். இது, தெய்வத்தின் திருவிளையாடல் போலும்! தேசபக்தியோடும் தெய்வபக்தியோடும் தமிழ்ப்பக்தியைக் கலந்துபாடும் பணியை 1915 ஆம் ஆண்டுக்குப் பிறகே மேற்கொள்ளுகின்றார். தெய்வபக்தியும் தேசபக்தியும் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல வென்பதனை முன்னரே உணர்ந்து, அந்த இரண்டையும் கலந்து வழங்கிய பாரதியார், சிறிது காலந்தாழ்ந்த பின்னர், தேசபக்தியும் தாய்மொழி்ப் பற்றும்கூட ஒன்றோடொன்று முரண்படக் கூடியவையல்ல ; பரஸ்பரம் ஒன்றையொன்று வளர்க்கக் கூடியவை என்பதனைத் தெள்ளத் தெளிய உணர்கின்றார். இந்தப் புனித உணர்ச்சியானது ‘மாதாவின் துவஜம்’ ‘சுயசரிதை’ ஆகிய பாடல்களிலேயே தலைக்காட்டியதென்றாலும்’ பாஞ்சாலி சபதத்தின் முகவுரையிலே, அதனை ஒரு கொள்கையாகவே ஏற்றுக் கொள்கின்றார் பாரதியார். அம்முகவுரையில், “தமிழ்மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப்பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுக்குத் தக்கவாறு ‘கைங்கரியங்கள்’ செய்யப்போகிற பிரபுக்களுக்கும் இந்நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகின்றேன்.” என்று கூறுகின்றார். ஆம்; எளியபதங்களால், இனியநடையிலே, மக்கள் விரும்பும் சந்தங்களிலே கவிதைகளும் காப்பியங்களும் படைக்கின்ற புதிய பரம்பரை-தன்னை முதல்வராகக்கொண்டு- வாழையடி வாழையென வரப்போகின்றது என்பதனை ஐயந்திரிபற |