பக்கம் எண் :

8விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

தமிழர்களுக்குமிடையே  மொழிபெயர்ப்பாளர்களாக  இருந்தனர் .  இவர்கள்
'துவிபாஷிகள்'  எனப்பட்டனர் . இவர்கள் ,  அரைகுறையாக  'உளறக்கூடிய'
அளவில்தான்  ஆங்கிலத்தில்   ஞானம்  பெற்றிருந்தனர் .  தங்கள்  தாய்
மொழியான  தமிழிலேயும்  இவர்கள்  போதிய  புலமை  பெற்றிருந்ததாகத்
தெரியவில்லை . பிரெஞ்சுக்காரருக்கும்  தமிழருக்குமிடையே  துவிபாஷியாக
இருந்த  புதுவை  ஆனந்தரங்கம்  பிள்ளை  தமிழில்  எழுதி  வைத்துள்ள
'நாட்குறிப்பு' (டைரி) இதற்குச் சிறந்த சான்றாகும். இவர்களிலே  சிலர் தமிழ்
மொழியையும்  தமிழ்  இனத்தையும்  தமிழ்நாட்டையும்   ஆங்கிலத்துக்கும்
ஆங்கிலேயருக்கும்  அடிமைப்படுத்தத்  தொண்டு புரிந்ததன்  காரணமாகப்
பெரும்பொருள் திரட்டினர். அந்தப் பொருளைக் கொண்டு  இங்குமங்குமாக
ஒன்றிரண்டு கல்வி நிலையங்களை அமைத்து  'வள்ளல்கள்' எனவும்  பெயர்
பெற்றுவிட்டனர்.

      ஆங்கிலம்  உலக  மொழியாக இருந்ததாலும்,  அதுவே  விஞ்ஞான-
தொழில் நுணுக்கக் கலைகளைப் பயிற்றுவிக்கும்  மொழியாக அமைந்ததாலும்
தமிழகத்திலே அதற்குப் பெருஞ் செல்வாக்குக் கிடைத்துவிட்டது.

      வரலாற்றைத்  துருவி  ஆராய்ந்தால், சங்க காலத்திலே  தமிழர் மீது
தமிழ் மொழி  ஒன்றே  ஆதிக்கஞ் செலுத்திய  நிலையைக்  காண்கின்றோம்.
பின்னர் , சங்க  காலத்தை அடுத்துள்ள  ஒரு காலக்கட்டத்தில் ,  தமிழோடு
தோழமை கொண்டிருந்த சம்ஸ்கிருதமொழி. ஆனால், ஆந்திரர் - மராத்தியர்
ஆதிக்கங்களின்  வரவால்  அந்தத்  தோழமை  மாறி ,  தமிழருடைய சமய
வாழ்விலே  சம்ஸ்கிருதம்  ஆதிக்கம்  பெற்று  , பின்னர்  சமூக வாழ்விலும்
கலந்து விட்டதைக் காண்கின்றோம் .அதனை அடுத்து  மொகலாயர் ஆட்சிக்
காலத்திலே , தமிழ் - சம்ஸ்கிருதம்  ஆகிய   இரண்டையும்   புறக்கணித்து உருதுமொழி ஆதிக்கம் பெற்றதைப் பார்க்கின்றோம்.

      அதன்  பின்னர் , ஆங்கிலேயர்  ஆட்சி   தோன்றிய  காலத்திலே,
தமிழ்- சம்ஸ்கிருதம்-உருது ஆகிய மூன்றையும் ஒதுக்கித் தள்ளி,  ஆங்கிலம்
ஒன்றே   ஆட்சி   மொழியாகவும் ,  கல்வி   மொழியாகவும் ,   நீதிமன்ற
மொழியாகவும்  நிலைபெற்ற  கொடுமையைக்  காண்கின்றோம் .   தமிழ் -
சம்ஸ்கிருதம் - உருது  ஆகிய  மொழிகளின் பால் பற்றுக்கொண்ட  மக்கள்
பரஸ்பரம்  பூசல்  கொள்ளாமல் , ஒன்றுபட்டிருப்பார்களானால் ,  ஆங்கில மொழியின்   ஆதிக்கத்தை  அது  தோன்றிய   காலத்திலேயே  தொலைத்
திருக்கலாம். அந்த நல்ல நிலை அன்றும்  இல்லை . இன்றும் இல்லை. இது
தான் தமிழகத்தின் மொழி வரலாறு.