சங்க காலத்தில் குமரி முதல் வேங்கடம் வரையுள்ள நிலப்பரப்பிலே தன்னாட்சி செலுத்திய தமிழ் மொழி, பின்னர்த் தாழ்ந்த நிலை அடையக் காரணம், தமிழர் அரசுரிமை இழந்து ஆந்திரருக்கும் மாரத்தியருக்கும் மொகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் வழிவழி அடிமைப்பட்டு வந்ததுதான் என்பதனை அறிந்தோம் . அரசுரிமை இழந்த இனத்திற்கு மொழியுரிமை ஏது? இதனை, தேவி! நின்னொளி பெறாத தேயமோர் தேய மாமோ? ஆவியங் குண்டோ? செம்மை அறிவுண்டோ? ஆக்க முண்டோ? காவிய நூல்கள் ஞானக் கலைகள்வே தங்க ளுண்டோ? பாவிய ரன்றோ நின்றன் பாலனம் படைத்தி லாதார்?1 என்ற தமது பாடலில் சொல்லாமல் சொல்லுகின்றார் மகாகவி பாரதியார். ஆங்கிலேயர் இந்தியாவில் புகுந்த பின்னர்தான் தமிழகம் அன்னியருக்கு அடிமைப்பட்டதாக நாம் எண்ணுமளவுக்கு வரலாறு எழுதப் பட்டு வந்திருக்கிறது . 'தமிழர் என்னும் இன உணர்ச்சியோடு , தமிழ்தான் நமது தாய்மொழி என்னும் மொழிப்பற்றோடு, கடந்த ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கால வரலாற்றை ஆராய்ந்து பார்ப்போமானால் ,இதுகாறும் நாம் எடுத்துக் காட்டியது போல,தமிழினத்தாரின் அடிமை வாழ்வு ஆங்கிலேயர் இந்த நாட்டில் புகுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஆரம்பமாகி விட்டதை அறியலாம். ஒருகால், மதஉணர்வோடு வரலாற்றைப் படிப்போர் வேறுவிதமான முடிவுக்கு வரலாம். சமயச் சார்பற்ற அரசு சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட தமிழ் வேந்தர்கள் சமய நம்பிக்கையுடைய வர்களாகவே இருந்தனர் . ஆயினும், சமயம் வேறு, அரசியல் வேறு என அவர்கள் நம்பினர். தனிப்பட்ட முறையில் தம் சமயம் எதுவாயினும் , அரசர் என்ற வகையில் ஒரு சமயச் சார்பற்றவர்களாகவே கோலோச்சினர் . அதனால், தமிழ் மொழியை எல்லாச் சமயத்தினருக்கும் உரிய பொது மொழியாகக் கருதி , அதனை வளர்ப்பதற்குப் பொறுப்பேற்றனர் . பாண்டிய வேந்தர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர். அந்தச் சங்கத்திலே, அந்தணர் - அரசர் - வணிகர்-வேளாளர் ஆகிய நால் வருணத்தினரும் சைவர்-வைணவர்- சமணர்-பௌத்தர் ஆகிய பல்வேறு சமயத்தினரும் அங்கம் வகித்தனர். ஆனால், முதல் முதலாகப் பல்லவர் காலத்தில் |