பக்கம் எண் :

88விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு

தமிழருக்கு எச்சரிக்கை

     தியாகி  சிவம்  அப்பழுக்கற்ற  தேசபக்தர்; தேசியவாதி, சம்ஸ்கிருத
மொழியிடத்துப்  பற்றும்   அதிலே  ஓரளவு  பயிற்சியுமுடையவர். பாரத
மண்பரப்பை  மாதாவாகவே கருதி, அந்த மாதாவுக்கு, பாப்பாரப்பட்டியில்
கோயில் கட்டவும் முயன்றவர். சுருங்கச் சொன்னால், தேசிய நெறியோடும்
மோதும் வேறு  வெறி  எதனையும்  ஏற்காதவர் -  எதிர்க்கவும் கூடியவர்.
அப்படிப்பட்ட வரும் தம் தாய்மொழியான தமிழிடத்து எல்லையற்ற பக்தி
கொண்டிருந்தார். தமிழ்ப்  பற்றானது  தேசப்பற்றுக்குத்  தத்துவ  ரீதியில்
எதிரானது  அல்லவென்று  அவர்  கருதினார். தமிழ்ப்பற்றை வலியுறுத்தி
அவர்   தமது  பத்திரிகையில்  எழுதியுள்ள  மற்றொரு  வாசகத்தையும்
பார்ப்போம்.
 

     ‘தமிழ்ப்   பண்டிதர்களே!  தமிழ்  மகா  ஜனங்களே!  ஜாக்கிரதை,
ஜாக்கிரதை!   உங்களுடைய  பாஷையைக்  காப்பாற்றுங்கள்.  ஒரு ஜன
சமூகத்திற்கு  உயிர் அதன் பாஷைதான். தமிழ்ப் பாஷையழிந்துவிட்டால்,
தமிழர்களின்   சிறப்பும்   சீரும்   அழிந்துவிடும்.  தமிழ்ப்  பாஷையில்
தேவையான  பதங்கள்  இல்லையென்று வாய் கூசாமல் கூறுகின்ற பாரத
புத்ரர்களுக்கு      அப்பதங்களை      யாராய்ந்து     கண்டுபிடித்துக்
கற்றுக்கொடுங்கள்.  சரியான  பதங்கள்  இல்லையேல், தமிழ் வாணியின்
கிருபை   கொண்டு   இன்னும்  அநேக  காரணப்  பெயர்களையாக்கிக்
கொடுங்கள்.

     ‘உங்கள் நா தமிழே பேசுக; நீங்கள் கையிலேந்தும்  இறகு தமிழே
எழுதுக; உங்களுடைய ஹிருதயம் தமிழையே நாடுக; உங்களையெல்லாம்
தமிழ் மாது தயையுடன் ரட்சித்திடுக”1

நீதிமன்றத்திலே வள்ளுவர்!

     திருவள்ளுவர்,  ‘செங்கோன்மை’   இதுவென   ஒரு அதிகாரமும்,
கொடுங்கோன்மை’      இதுவென     ஒரு     அதிகாரமும்    பாடி
வைத்துப்போயுள்ளார்.    வள்ளுவர்    சொன்ன   ‘கொடுங்கோன்மை’
இலக்கணத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சியை இலக்கியமாக எடுத்துக்காட்டினார்
சிவனார்.    அதையும்,    நீதிமன்றத்திலே,   குற்றவாளிக்   கூண்டில்
நின்றுகொண்டு,  ஒரு   தேசபக்தனுக்குரிய   வீரத்தோடு     புகன்றார்.


1. ’ஞானபாநு’ செப்டம்பர், 1915.