சிறைகளில் அடைக்கப்பட்டு, அல்லலுற்றார். அந்த நேரங்களிலெல்லாம் அவர் தமிழில் ஆன்மிக நூல்கள் பல இயற்றினார். சிறைவாசத்தின்போதும் சிறைக்கு வெளியே வாழ்ந்த காலத்திலும் அவர் இயற்றிய நூற்கள் மொத்தம் முப்பத்துக்கு மேற்பட்டவையாகும். அவற்றுள் முக்கியமானவை வருமாறு: (1) சச்சிதானந்த சிவம், (2) யோக சாதன இரகஸ்யம், (3) ராமாநுஜ விஜயம், (4) ராமகிருஷ்ண பரமஹம்சர் சரித்திரமும் உபதேசங்களும், (5) விவேகானந்தர் சரித்திரம், (6) உபதேசங்கள், (7) சங்கரர் விஜயம். இவையன்றி, நெட்டாஜி வீர ரத்தின பாஜிப் பிரபு முதலிய கதைகளையும்; வீரசிவாஜி, செஞ்சி தேசிங்கு, ஆகிய நாடகங்களையும்; நளினசுந்தரி அல்லது நாகரிகத் தடபுடல் என்ற நாவலையும் எளிய இனிய தமிழ் நடையில் எழுதி வெளியிட்டார். சுவாமி விவேகானந்தர் ஆங்கில மொழியில் இயற்றிய வேதாந்த நூல்கள் சிலவற்றையும் தமிழில் மொழிபெயர்த்தளித்தார். அவற்றில், (1) ஆத்மஞான ரத்தினம், (2) அருள் மொழிகள், (3) எதிரொலிகள், (4) தற்கால இந்தியா ஆகியவை முக்கியமானவையாகும். தியாகி சிவம், தமிழிலுள்ள சங்கஇலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பதிணென் கீழக்கணக்கு நூற்கள், புராண-இதிகாசங்கள் ஆகியவற்றிலே எந்த ஒன்றிற்கும் வழிநூல் அல்லது சார்பு நூல் எதுவும் செய்யவில்லை. தமிழ் மொழியின் அருமை பெருமைகளை விளக்கும் ஆராய்ச்சி நூல் எதுவும் இயற்றவில்லை என்பது உண்மைதான். ஆனால், அவர், தம் தாய்மொழியான தமிழிலே வேதாந்த இலக்கியங்களைப் பெருக்குவித்து, அத்துறையில் தமிழ் மொழிக்கிருந்த ‘வறுமை’யைப் போக்க முயன்றார் எனலாம். சிவம் வாழ்ந்த காலத்தில், சுவாமி விவேகானந்தரின் வேதாந்த முரசு திக்கெட்டும் ஒலித்தது -குறிப்பாக, இந்தியாவிலே தெய்வபக்தியையும் தேசபக்தியையும் பிணைக்கும் பாலமாக விளங்கினார் சுவாமி விவேகானந்தர். அடிமை இருளகலவும் வேதாந்த ஒளிகாட்டி உதவினார் என்று சொல்லலாம். பேச்சு வழக்கற்றுவிட்ட சம்ஸ்கிருத மொழியில் சிறைப்பட்டுக் கிடந்த ஆன்மிகச் செல்வங்களையெல்லாம் பேச்சு வழக்கிலுள்ள பிரதேசமொழிகளில் கொண்டு |