பற்றி மற்ற விவரங்கள் ஏதேனும் வேண்டுவோர் கீழ்க்கண்ட விலாசத்திற்கு எழுதித் தெரிந்துகொள்க. கார்யஸ்தர், “ஞானபாநு” மைலாப்பூர், சென்னை.’ இந்த விளம்பரத்திலே , “சம்ஸ்கிருதம் முதலிய அந்நிய பாஷைச் சொற்கள்” என்று சிவம் குறிப்பிட்டிருப்பது, சிந்தனைக்குரியதாகும். சிவம், ஆசாரத்தால் அந்தணர் ஆன்மிகத்தால் வேதாந்தி கொண்ட கோலத்தால் துறவி. இப்படியிருந்தும், அந்தண வருணத்தவர் போற்றும் சம்ஸ்கிருத மொழியினை அவர் ‘அந்நிய மொழி’ என்று குறிப்பிட்டிருப்பது நமக்கு வியப்பைத் தரும். கலாச்சாரத்துறையிலே இந்திய மொழிகளையெல்லாம் - அம்மொழிகளைப் பேசும் இந்துக்களையெல்லாம் - பிணைக்கும் பொது மொழி சம்ஸ்கிருதம். அன்றுமட்டுமல்ல, இன்றுங்கூடத்தான். இந்து சமயப்பற்றுதலும் அந்த சமயத் தத்துவங்களிலே ஆர்வமும் கொண்டவர்கள் - அவர்கள் அந்தணராகட்டும்; அந்தணரல்லாதாராகட்டும் - சம்ஸ்கிருத மொழியைச் கலாச்சார அளவிலேனும் தம் சொந்த மொழியாகக் கொள்வர். சுப்பிரமணிய சிவம் அவர்களுக்கும் இது உடன்பாடுதான். ஆயினும் ஆன்மிகத்திற்குப் புறம்பான உலகியல் வாழ்விலே தமிழ் ஒன்றுதானே அவரது தாய்மொழி! அதனால், தமிழல்லாத பிற மொழிகளையெல்லாம் அவர் உலகியலில் அந்நிய மொழிகளாகக் கருதியதில் தவறில்லைதானே! சுப்பிரமணிய சிவம் வாழ்ந்த காலத்தில் , சமயத் துறையில் மட்டுமல்லாமல், அரசியலிலும் தமிழ்மொழிக்கு முதலிடமில்லாத நிலை இருந்து வந்தது. ‘வந்தேமாதரம்’ - ‘தேசியம்’ - ‘ சுதந்தரம்’ - ‘சுயராஜ்யம்’ - ‘பாரத மாதா’ ஆகிய சொற்களெல்லாம் பாரத மக்கள் அனைவருடைய உள்ளங்களிலேயும் குடிபுகுந்திருந்தனவாதலால், தமிழரும் அம்மந்திர மொழிகளை வெறுக்காமல், விரும்பி ஏற்றதிலே பிழையொன்றுமில்லை. ஆனால் தமிழ் இலக்கியத் துறையிலேயும் - குறிப்பாக, சங்க இலக்கியங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலேயும் வடமொழிச் சொற்கள் தேவைக்கதிகமாக ஆதிக்கம் பெற்றன. அதனாற்றான், தாம் விரும்பிய தனித்தமிழ்க் |