பக்கம் எண் :

376என் சரித்திரம்

யும் தமக்குக் கடிதம் எழுதியிருப்பதையும் எண்ணி எண்ணீ விம்மிதம்
அடைவதிலேயே அவர் கவனம் சென்றது; அக் கடிதம் எதன் பொருட்டு
எழுதப்பெற்றதென்பதை அவர் யோசிக்க வில்லை. நான் எடுத்துச்
சொன்னபோது ரெட்டியார் தர்ம சங்கடத்தில் அகப்பட்டார்.

“நீங்கள் அவசியம் அங்கே போகவேண்டுமா? இங்கேயே இருந்து
இராமாயணம், பாகவதம் முதலியவைகளையும் பிரசங்கம் செய்து வந்தால்
எங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்வோமே. ஒரு கவலையும் ஏற்படாமல்
பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பிள்ளையவர்களிடம் அடிக்கடி போய்ச் சில
நாட்கள், இருந்து வரலாம். நாங்களும் வந்து அவர்களைக் கண்டு கேட்டுக்
கொள்கிறோம். அவர்களையே இங்கே அழைத்து வந்து சில காலம் இருக்கச்
சொல்லி உபசாரங்கள் செய்து அனுப்ப எண்ணியிருக்கிறோம். நீங்களோ
இனிமேற் கிரமமாக இல்லறத்தை நடத்தவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.
இங்கே நீங்கள் எல்லாவிதமான சௌகரியங்களையும் அடையலாம். உங்கள்
தகப்பனாருக்கும் மிகவும் திருப்தியாக இருக்கும். இது நான் மாத்திரம்
சொல்லுவதன்று. பிரசங்கம் கேட்க வருபவர்கள் எல்லோருக்கும் உங்களை
இங்கே இருக்கும்படி செய்யவேண்டுமென்ற கருத்து இருக்கிறது. அடுத்தபடி
என்ன படிக்கப் போகிறாரென்று எல்லோரும் என்னை ஆவலாகக்
கேட்கிறார்கள்” என்று அவர் ஒரு சிறு பிரசங்கம் செய்தார்.

“நம்முடைய தந்தையார் எதை விரும்புகிறாரோ அதற்கு அனுகுணமாக
அல்லவோ இருக்கிறது இந்தப் பேச்சு? இவர்களுடைய அன்பு நமக்கு ஒரு
தடையாக நிற்கிறதே!” என்று எண்ணிச் சிறிது தடுமாறினேன். பிறகு,
“உங்களுடைய அன்பை நான் மறக்க மாட்டேன். இன்னும் சில காலம்
பிள்ளையவர்களிடம் போய் இருந்து பாடம் கேட்டுப் பின்பு இங்கேயே
வந்துவிடுகிறேன். நான் இன்னும் பால்யன்தானே? நான் கற்றுக்
கொள்ளவேண்டியவற்றை இப்போது கற்றுக் கொள்ளாவிட்டால் பிறகு
வருந்தும்படி நேரும். பிள்ளையவர்களுடைய பெருமை உங்களுக்குத்
தெரியாததன்று. அவர்களிடம் பாடம் கேட்கும் பாக்கியம்
கிடைத்திருக்கும்போது அதை இடையே நழுவவிடுவது தருமமா? என்னுடைய
நன்மையை விரும்புபவர்களில் நீங்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
உங்களுடைய விருப்பத்தை நான் புறக்கணிப்பதாக எண்ணக் கூடாது. உங்கள்
விருப்பத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பம் எப்படியும் கிடைக்கும், ஆனால் என்
விருப்பம் நிறைவேறுவதற்கு இதுதான் சமயம்” என்று அவரிடம் சொன்னேன்.