பக்கம் எண் :

138சத்திய சோதனை

Untitled Document
என்பதைக் காட்டுகிறேன்” என்று விரலை ஆட்டி, உறுமிக் கொண்டே
இருந்தார்.        நான் வாய் திறவாது உட்கார்ந்திருந்தேன்.  எனக்கு
உதவுமாறு கடவுளைப் பிரார்த்தித்தேன்.

     இருட்டியதும் ஸ்டாண்டர்ட்டன் போய்ச் சேர்ந்தோம்.   அங்கே
சில இந்திய முகங்களைக் கண்டதும் ஒரு சிறிது ஆறுதல்  அடைந்து
பெரு மூச்சு விட்டேன். நான்    வண்டியிலிருந்து இறங்கியதும் அந்த
நண்பர்கள்,      “உங்களை வரவேற்று,    ஈஸா சேத்தின் கடைக்கு
அழைத்துச்   செல்ல        இங்கே       வந்திருக்கிறோம். தாதா
அப்துல்லாவிடமிருந்து எங்களுக்குத் தந்தி வந்திருக்கிறது” என்றார்கள்.
நான் அதிக மகிழ்ச்சி அடைந்தேன்.    சேத் ஈஸா ஹாஜி ஸூமாரின்
கடைக்குச்  சென்றோம்.    சேத்தும் அவருடைய   குமாஸ்தாக்களும்
என்னைச் சுற்றி           உட்கார்ந்து கொண்டார்கள்.  நான் பட்ட
கஷ்டங்களையெல்லாம்             சொன்னேன்.    கேட்டு அதிக
வருத்தப்பட்டார்கள்.      தங்களுக்கு       ஏற்பட்ட    மோசமான
அனுபவங்களையெல்லாம் கூறி என்னைத் தேற்றினார்கள்.

     நடந்ததையெல்லாம் கோச் வண்டிக் கம்பெனியின் ஏஜண்டுக்கு
அறிவிக்க விரும்பினேன். எனக்கு நேர்ந்ததையெல்லாம் எடுத்துக்கூறி,
அவருடைய ஆள் என்னை   மிரட்டியதையும் அவர் கவனத்திற்குக்
கொண்டு வந்து ஒரு கடிதம் எழுதினேன்.   மறுநாள் காலை நாங்கள்
புறப்படும்போது மற்ற பிரயாணிகளுடன்   என்னை உள்ளே உட்கார
வைப்பதாக வாக்குறுதி தரவேண்டும் என்றும்  அவரிடம் கேட்டேன்.
இக்கடிதத்திற்கு     ஏஜண்டு      பின் வருமாறு     பதிலளித்தார்.
“ஸ்டாண்டர்ட்டனிலிருந்து      வேறு ஆட்களைக் கொண்ட பெரிய
வண்டி போகிறது.  நீங்கள் புகார் செய்யும் அந்த ஆசாமி நாளைக்கு
அங்கே இருக்க மாட்டார்.     மற்ற பிரயாணிகளுடன் உங்களுக்கும்
இடம் இருக்கும்”.  இது ஒருவாறு எனக்கு     ஆறுதலை அளித்தது.
என்னை   அடித்த ஆசாமி மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற
நோக்கமே    எனக்கு இல்லை.  ஆகவே,   அடிபட்ட அத்தியாயம்
அத்தோடு முடிந்தது.

     மறுநாள் காலையில்    ஈஸா சேத்தின் ஆள் என்னைக் கோச்
வண்டிக்கு அழைத்துச் சென்றார். எனக்கு நல்ல ஆசனம் கிடைத்தது.
அன்றிரவு பத்திரமாக ஜோகன்னஸ்பர்க்கை அடைந்தேன்.

     ஸ்டாண்டர்ட்டன் சிறு கிராமம்;   ஜோகன்னஸ்பர்க்கோ பெரிய
நகரம்         அப்துல்லா சேத்     ஜோகன்னஸ்பர்க்கிற்கும் தந்தி
கொடுத்திருந்தார். அங்குள்ள  மகமது காஸீம் கம்ருதீன் கம்பெனியின்
விலாசத்தையும் என்னிடம்   கொடுத்திருந்தார்.   என்னைச் சந்தித்து
அழைத்துப்     போவதற்கு    கம்பெனியின்      ஆள் ஒருவரும்
வண்டி நிற்கும் இடத்திற்கு வந்திருந்தாராம். ஆனால், நான் அவரைப்
பார்க்கவும் இல்லை. அவர் என்னைத் தெரிந்து கொள்ளவும் இல்லை.
ஆகவே, ஒரு    ஹோட்டலுக்குப் போவது என்று முடிவு செய்தேன்.