பக்கம் எண் :

வழக்கு வாபசாயிற்று497

Untitled Document
நான் இப்படி வாக்குமூலம்    கொடுப்பேன் என்று எதிர்பாராததனால்
மாஜிஸ்டிரேட், அரசாங்க வக்கீல் ஆகிய    இருவருமே திடுக்கிட்டுப்
போனார்கள்.     மாஜிஸ்டிரேட், தீர்ப்புக்  கூறுவதை ஒத்திவைத்தார்.
இதற்கு மத்தியில் முழு விவரங்களையும்       நான் வைசிராய்க்கும்,
பாட்னா நண்பர்களுக்கும், பண்டித மதன்  மோகன மாளவியாவுக்கும்,
மற்றவர்களுக்கும் தந்தி மூலம் அறிவித்தேன்.

     தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதற்கு       நான் கோர்ட்டில்
ஆஜராவதற்கு முன்னாலேயே         மாஜிஸ்டிரேட் எழுத்து மூலம்
எனக்குத் தகவலை அனுப்பிவிட்டார். என் மீதுள்ள  வழக்கை வாபஸ்
வாங்கிக் கொள்ளும்படி கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார் என்று அதில்
அவர் கூறியிருந்தார். கலெக்டரும் எனக்கு   ஒரு கடிதம் எழுதினார்.
நான் நடத்தவிருந்த விசாரணையை நான்       தாராளமாக நடத்திக்
கொண்டு போகலாம் என்றும்,            எனக்கு வேண்டிய உதவி
அதிகாரிகளிடமிருந்து      கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வளவு விரைவில், இவ்விஷயம்         இப்படி மகிழ்ச்சிகரமான
வகையில் தீர்ந்துவிடும் என்று     எங்களில் யாரும் எதிர்பார்க்கவே
இல்லை.

     கலெக்டர் ஸ்ரீ ஹேகாக்கைப்      பார்க்கப் போனேன். அவர்
நல்லவராகவும்,           நியாயத்தைச் செய்யவேண்டும் என்பதில்
ஆவலுள்ளவராகவுமே           காணப்பட்டார். பார்க்க விரும்பும்
தஸ்தாவேஜு களை       நான் கேட்கலாம் என்றும், நான் விரும்பும்
போதெல்லாம் தம்மை வந்து காணலாம்    என்றும் அவர் கூறினார்.

     இவ்விதம் சாத்விகச் சட்ட மறுப்பில் முதல் உதாரண பாடத்தை
நாடு பெற்றது. சம்பாரணில் எங்கும்      இதைக் குறித்தே பேசினர்.
பத்திரிகைகளும் தாராளமாக  எழுதின. இதனால், நான் மேற்கொண்ட
விசாரணைக்கு எதிர்பாராத விளம்பரமும் கிடைத்தது.

     அரசாங்கம் நடுநிலைமை           வகிக்க வேண்டியது என்
விசாரணைக்கு மிகவும் அவசியமானது.         ஆனால், பத்திரிகை
நிருபர்களின் உதவியும்,     பத்திரிகைகளில்    தலையங்கம் எழுதி
ஆதரிப்பதும் இந்த    விசாரணைக்குத் தேவையில்லை. உண்மையில்
சம்பாரணில் இருந்த நிலைமை,       மிக ஜாக்கிரதையாகக் கையாள
வேண்டிய கஷ்டமான      நிலைமை. ஆகையால், அதிகப்படியாகக்
கண்டித்து எழுதிவிடுவதோ, மிகைப்படுத்தி விடும் செய்திகளோ நான்
அடைய முற்பட்டிருந்த         லட்சியத்திற்குத் தீமை விளைவித்து
விடக்கூடும். எனவே,              முக்கியமான பத்திரிகைகளின்
ஆசிரியர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். பிரசுரிக்க வேண்டியது
அவசியம் என்று இருப்பதை   நானே எழுதுவதாகவும், நிலைமையை
அப்போதைக்கப்போது               அவர்களுக்குத் தெரிவித்துக்
கொண்டிருப்பதாகவும் நான் எழுதியதோடு,   நிருபர்களை அனுப்பும்
சிரமம்     அவர்களுக்கு வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.