பக்கம் எண் :

மரணத்தின் வாயிலருகில் 543

Untitled Document
வந்தது. இதனால்,          நாளுக்கு நாள் உடல் மெலிந்தது. நோய்
நீண்டகாலம் நீடித்து இருந்து வரும்,     அநேகமாக மரணத்திலேயே
முடிந்துவிடக்கூடும் என்று      எண்ணினேன். அம்பாலால் சேத்தின்
வீட்டில் என்மீது சொரியப்பட்ட         அன்பிற்கும் கவனத்திற்கும்
எல்லையே இல்லை.           என்றாலும், என் மனம் அமைதியே
இல்லாதிருந்தது. என்னை ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் விடும்படி
அவரை வற்புறுத்தினேன்.     என் வற்புறுத்தலுக்கு அவர் இணங்க
வேண்டியதாயிற்று.

     ஆசிரமத்தில் இவ்விதம் நான் வலியால்  படுக்கையில் புரண்டு
கொண்டிருக்கையில்,       ஜெர்மனி அடியோடு தோற்கடிக்கப்பட்டு
விட்டது என்றும், படைக்கு ஆள்  திரட்டுவது இனி அவசியமில்லை
என்று கமிஷனர்         சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றும் ஸ்ரீ
வல்லபபாய் செய்தி கொண்டுவந்தார். படைக்கு ஆள் திரட்டுவதைக்
குறித்து நான் மேற்கொண்டும்       கவலைப்பட வேண்டியதில்லை
என்பது எனக்கு அதிக ஆறுதலை அளித்தது.

     அப்பொழுது நான்    நீர்சிகிச்சை செய்து கொண்டு வந்தேன்.
அதில் எனக்குக் கொஞ்சம்      சுகம் தெரிந்தது. ஆனால், உடம்பு
தேறும்படி செய்வது மிகவும்      கஷ்டமான வேலையாக இருந்தது.
வைத்தியர்கள் பலர்        எனக்கு ஏராளமாக ஆலோசனை கூறி
வந்தார்கள். ஆனால், அவற்றில்      எதையும் அனுசரிக்க எனக்கு
விருப்பமில்லை. பால் சாப்பிடுவதில்லை     என்ற விரதம் கெடாமல்
மாமிச சூப் சாப்பிடலாம் என்றும் இரண்டு,    மூன்று வைத்தியர்கள்
யோசனை கூறினர். இந்த ஆலோசனைக்கு ஆயுர்வேதத்திலிருந்தும்
மேற்கோள்களைக் காட்டினர்.  அவர்களில் ஒருவர், முட்டைகளைச்
சாப்பிடும்படி பலமாகச்      சிபாரிசு செய்தார். ஆனால், அவர்கள்
எல்லோருக்கும், “முடியாது” என்ற ஒரே     பதிலையே நான் கூறி
வந்தேன்.

     ஆகாரத்தைப்பற்றிய விஷயம்,      எனக்குச் சாத்திரங்களின்
ஆதாரங்களைக் கொண்டு   முடிவு செய்யவேண்டியது அன்று. என்
வாழ்க்கையின் போக்கு, வெளி     ஆதாரங்களை மேற் கொண்டும்
நம்பியிராத      கொள்கைகளின் வழியை அனுசரித்தது. அதனுடன்
பின்னியிருப்பது எனது      உணவு விஷயம். அக்கொள்கைகளைப்
புறக்கணித்துவிட்டு  வாழும் ஆசை எனக்கு இல்லை. என் மனைவி,
குழந்தைகள்,        நண்பர்கள் இவர்கள் விஷயத்தில் இரக்கமற்ற
வகையில் நான் வற்புறுத்தி    வந்திருக்கும் ஒரு கொள்கையை என்
விஷயத்தில் மாத்திரம் நான் எப்படிக் கைவிட்டுவிட முடியும்?

     என் வாழ்க்கையில் எனக்கு     முதல் முதல் ஏற்பட்ட நீண்ட
நாள் தொடர்ந்த நோய் இதுதான்.  இந்நோய், என் கொள்கைகளைப்
பரிசீலனை செய்து சோதிக்கும்        வாய்ப்பை இவ்வாறு எனக்கு
அளித்தது. ஒரு நாள் இரவு        நான் நம்பிக்கையை அடியோடு